ஷாரூக்கானின் பதான் படம் போல பட்ஜெட்டும் சூப்பர் ஹிட்டு : பகுஜன் சமாஜ் கட்சி எம்.பி. பாராட்டு
ஷாரூக்கான் நடிப்பில் வெளியாகி வெற்றிகரமாக ஒடிக்கொண்டிருக்கும் பதான் படம் போல் மத்திய பட்ஜெட்டும் சிறப்பாக உள்ளது என்று மத்திய பட்ஜெட்டை பகுஜன் சமாஜ் கட்சி எம்.பி. மலூக் நகர் கூறியுள்ளார்.
நிர்மலா சீதாராமன்
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று நாடாளுமன்றத்தில் எதிர்வரும் 2023-24ம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.
பெண்களுக்கான சேமிப்பு திட்டம், ரூ.7 லட்சம் வரை ஆண்டு சம்பளம் பெறுவோர் வருமான வரி செலுத்த வேண்டியது இல்லை போன்ற பல திட்டங்கள் இருந்தன.

மத்திய அரசின் பட்ஜெட்டிற்கு எதிர்கட்சிகள் கடும் விமர்சனத்தை முன் வைத்து வருகின்றன, அதே சமயம் வழக்கம் போல் ஆளும் கட்சியினர் புகழ்ந்துள்ளனர்.
பதான் படம் போல சூப்பர் பட்ஜெட்
இந்த நிலையில் மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் கட்சி எம்.பி. ஒருவர் மத்திய பட்ஜெட்டை, ஷாரூக்கான் நடிப்பில் வெளியாகி சில தினங்களிலேயே ரூ.600 கோடி வசூல் செய்த பதான் படம் போல் மத்திய பட்ஜெட் சிறப்பாக உள்ளது என்று புகழ்ந்தது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
நாடாளுமன்ற வளாகத்தின் வெளியே செய்தியாளர்களிடம் மத்திய பட்ஜெட் குறித்து பகுஜன் சமாஜ்வாடி கட்சி எம்.பி. மலூக் நகர் கூறுகையில், பதான் திரைப்படம் வெற்றி பெற்றது போலவே மத்திய பட்ஜெட் 2023 சாமானிய மக்களுக்கு நிவாரணம் அளித்துள்ளது.
மத்திய பட்ஜெட்டில் சிறந்த விஷயம் என்னவென்றால், வருமான வரி தள்ளுபடி வரம்பு ரூ.7 லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நாட்டின் பொருளாதாரம் வலுவடையும். இந்தியா 5 லட்சம் கோடி டாலர் பொருளாதாரமாக மாற வேண்டும் என்ற பிரதமர் மோடியின் கனவு நனவாகும் என தெரிவித்தார்.