பஹல்காமில் கணவரை இழந்த பெண்களிடம் வீரம் இல்லை - பாஜக எம்.பியின் பேச்சால் சர்ச்சை
பஹல்காம் தாக்குதலில் கணவரை இழந்த பெண்கள் குறித்து பாஜக எம்.பி பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
பஹல்காம் தாக்குதல்
காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், கடந்த மாதம் சுற்றுலா பயணிகள் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில், 26 பேர் கொல்லப்பட்டனர்.
இதற்கு பதிலடியாக ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் இந்திய அரசு ராணுவ நடவடிக்கையை மேற்கொண்டது.
பஹல்காம் தாக்குதலில் பயங்கரவாதிகள் ஆண்களை மட்டும் குறி வைத்து தாக்கியதாக அங்கிருந்த பெண்கள் தெரிவித்தனர்.
இந்நிலையில், பஹல்காம் தாக்குதலில் கணவர்களை இழந்த பெண்கள் குறித்து பாஜக எம்பி பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
பாஜக எம்.பி சர்ச்சை பேச்சு
அரியானா மாநிலத்தைச் சேர்ந்த பாஜக எம்.பி.யான ராம்சந்தர் ஜாங்கிரா, கூட்டம் ஒன்றில் பேசுகையில், "அங்கே எங்கள் சகோதரிகள் இருந்தனர். அவர்களின் மாங்கல்யம் பறிக்கப்பட்டுள்ளது.
ஆனால் அவர்கள் தங்களை ஒரு வீராங்கனை போல எண்ணவில்லை. அவர்களிடம் போராட்ட உணர்வு இல்லாததாலே உயிரிழப்புகள் நிகழ்ந்தன. பயங்கரவாதிகளிடம் மன்றாடுவதற்குப் பதிலாக, உங்கள் கணவர்களின் உயிரைக் காப்பாற்ற அவர்களுடன் போராடியிருக்க வேண்டும்" என பேசினார்.
இவரின் பேச்சுக்கு எதிர்க்கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
முன்னதாக பாஜக அமைச்சர் ஒருவர் கர்னல் சோபியா குரேஷியை பயங்கரவாதிகளின் சகோதரி என பேசியதற்கு நீதிமன்றம் அவர் மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட்டது.