மசூதி மீது அம்பு எய்வதுபோல் சைகை - பாஜக பெண் வேட்பாளரின் சர்ச்சை செயல்!
ஹைதராபாத் மக்களவை தொகுதி பாஜக வேட்பாளரின் சைகை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
சர்ச்சை செய்கை
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் மக்களவை தொகுதியில் பாஜக சார்பில் கொம்பெல்லா மாதவி லதா என்பவர் போட்டியிடுகிறார். இவர் ராம நவமியன்று பிரமாண்ட ஊர்வலம் ஒன்றை நடத்தினார்.
அப்போது மாதவி லதா, மசூதி ஒன்றை நோக்கி வில்லை கொண்டு அம்பு எய்வது போன்று சைகை செய்தார். இதுதொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
மன்னிப்பு
மேலும், மாதவி லதாவின் இந்த செயலுக்கு பலரும் கண்டனம் தெரிவித்தனர். இந்நிலையில் இந்த வீடியோ தொடர்பாக மாதவி லதா வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில் "சமூக வலைத்தளங்களில் வெளியாகி இருக்கும் எனது வீடியோ முழுமையான ஒரு வீடியோ கிடையாது என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறேன்.
அந்த வீடியோவால் யாரது மனமாவது புண்பட்டு இருந்தால், நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். அவர்கள் அனைவரையும் மதிக்கிறேன்'' என்று குறிப்பிட்டுள்ளார்.