பெண்கள் குறித்து சர்ச்சை கருத்து - மன்னிப்பு கேட்ட பாஜக அமைச்சர்
மத்திய பிரதேச மாநிலத்தை சேர்ந்த உணவு மற்றும் சிவில் சப்ளை துறை பாஜக அமைச்சர் பிசாஹுலால் சிங் சில தினங்களுக்கு முன் பெண்களின் உரிமைகள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார்.
அவர், 'உயர்சாதி மற்றும் செல்வாக்கு மிக்கவர்கள் தங்கள் பெண்களை வீட்டிற்குள் கட்டுப்படுத்தி வைத்துள்ளனர். சமூக - சமத்துவம் வேண்டும் என்றால், இந்த பெண்களை அவர்களின் வீட்டை விட்டு வெளியேற்ற வேண்டும்.
செல்வாக்கு மிக்கவர்கள் தங்களது பெண்கள் சமூக - சமத்துவத்தைப் பெற அனுமதிப்பதில்லை' என பேசியிருந்தார். இவரின் இந்த பேச்சுக்கு பலரும் கடும் கண்டனம் தெரிவித்ததை தொடர்ந்து அமைச்சர் பிசாஹுலால் சிங் தனது டுவிட்டர் பக்கத்தில், 'யாருடைய உணர்வுகளையும் நான் புண்படுத்தும்படி பேசவில்லை.
அவ்வாறு அவர்களது மனம் புண்பட்டால் அதற்காக நான் மன்னிப்பு கேட்கிறேன். எந்தவொரு சமூகத்தையும் குறைத்து பேசவில்லை. பெண்கள் சமத்துவத்துடன் சமூக சேவை செய்ய வேண்டும் என்பதே எனது நோக்கம்.
ஆனால், எனது வார்த்தைகள் தவறாக புரிந்து கொள்ளப்பட்டது' என்று மன்னிப்பு தெரிவித்துள்ளார்.