அமைச்சரின் பேச்சால் செருப்பு வீசிய பாஜகவினர் - என்ன சொன்னார் பிடிஆர்?
தமிழக நிதித்துறை அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கார் மீது பாஜகவினர் காலணி வீசிய சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராணுவ வீரர் உடலுக்கு அஞ்சலி
தற்கொலை படை தாக்குதலில் உயிரிழந்த ராணுவ வீரர் லட்சுமணன் உடல் மதுரை விமான நிலையம் வந்தடைந்தது.

அப்போது ராணுவ வீரர் உடலுக்கு அரசு மரியாதை செலுத்தப்பட்டது. லட்சுமணன் உடலுக்கு அமைச்சர்கள் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன், தங்கம் தென்னரசு,கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமசந்திரன் உள்ளிட்ட அமைச்சர்கள் மரியாதை செலுத்தினர்.
ராணுவ வீரர் உடலுக்கு மரியாதை செலுத்த தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வந்திருந்தார் அதனால் ஏராளமான பாஜக தொண்டர்கள் குவிந்திருந்தனர்.
அமைச்சர் பேச்சால் பாஜகவினர் செருப்பு வீச்சு?
இதை பார்த்த அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் இவர்கள் ஏன் இங்கு வந்தார்கள் என்ன வேலை இங்கே என கேட்டதாக சொல்லப்படுகிறது.
அஞ்சலி செலுத்த வேண்டும் என்றால் பொதுமக்களுடன் சேர்ந்து அவரது வீட்டிற்கு சென்று அஞ்சலி செலுத்தட்டும் என கூறியதாக கூறப்படுகிறது.
பின்னர் ராணுவ வீரர் உடலுக்கு தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மரியாதை செலுத்தினார்.இதனால் திமுக, பாஜகவினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
பின்னர் அஞ்சலி செலுத்திய பின்பு அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் காரில் ஏறி விமான நிலையத்தை விட்டு வெளியே வந்தார்.

அப்போது வெளியே காத்திருந்த பாஜகவினர் அவரின் காரை முற்றுகையிட்டனர்.அப்போது செருப்பு அமைச்சரின் கார் மீது வீசப்பட்டது.
இதையடுத்து அங்கிருந்த போலீசார் பாஜகவினரை அப்புறப்படுத்தினர்.செருப்பு வீசியது தொடர்பாக இது வரை 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களின் விவரம் இது வரை வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.