என்னை அப்படி அழைக்க வேண்டாம்..! வேறுபடுத்தி பார்க்காதீர்கள் - பிரதமர் மோடி வேண்டுகோள்!
மோடிஜி என கூறி தன்னை வேறுபடுத்திப் பார்க்க வேண்டாம் என்று பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சட்டமன்ற தேர்தல்
ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெற்றது. இந்நிலையில் அக்கட்சியில் எம்.பி.க்கள் கூட்டம் டெல்லியில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் பங்கேற்க பிரதமர் மோடி வந்தபோது, அனைவரும் எழுந்து நின்று கைத்தட்டி வரவேற்றனர். மேலும், மோடிஜியால் கட்சி மிகைப்பெரிய வெற்றி பெற்றுள்ளதாக கோஷம் எழுப்பினர்.
அந்த கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது "மிகஜாம் புயலால் உயிரிழந்தவர்களுக்கு எனது இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். பாஜகவினர் அனைவரும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்வதில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். தேர்தல் முடிவுகள் சிறப்பாக இருந்தது. மிசோரமிலும் நம் பலம் இரட்டிப்பாகியது.
பிரதமர் மோடி
தெலுங்கானாவில் நமது பலம் பன்மடங்கு அதிகரித்துள்ளது. மத்தியில் பாஜக நன்றாக உள்ளது ஆனால் மாநில அளவில் பலம் இல்லை என்று பரப்பப்படும் வதந்தி தவறானது. பாஜகவின் ஆட்சி முடிவெடுப்பது மற்றும் வெளிப்படைத் தன்மை போன்றவற்றை மக்கள் விரும்புகிறார்கள்.
ஒரு அரசாங்கமாக எங்களிடம் நேர்மறையான எண்ணம் இருப்பது பெரிய விஷயம். இத்தேர்தலில் கிடைத்த வெற்றி எமது கூட்டு பலத்தின் வெற்றியாகும். ஒவ்வொரு பாஜக. தொண்டரும் இந்த வெற்றிக்கு தகுதியானவர்கள்.
இந்த வெற்றி தனி நபரின் வெற்றி அல்ல, கட்சியினரின் கூட்டு முயற்சிக்குக் கிடைத்த வெற்றி. மேலும், மோடிஜி என கூறி தன்னை வேறுபடுத்திப் பார்க்க வேண்டாம். நான் மோடி மட்டுமே. தொடர்ந்து கூட்டு முயற்சியுடன் கட்சி முன்னோக்கி பயணிக்க வேண்டும்" என கூறியுள்ளார்.