இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து கொலை - மூத்த பாஜக தலைவரின் மகன் ரிசார்ட் இடிப்பு!
இளம்பெண் கொலை வழக்கில், பாஜக தலைவர் மகனின் சொகுசு விடுதி இடிக்கப்பட்டது.
கூட்டு பாலியல் வன்கொடுமை
உத்தரகாண்ட் மாநில பாஜக மூத்த தலைவர் வினோத் ஆர்யா. இவரது மகன் புல்கிட் ஆர்யா. பவ்ரி ஹர்க்வல், ரிஷிகேஷ் அருகே புல்கிட் ஆர்யாவுக்கு சொந்தமான சொகுசு விடுதி உள்ளது. வனந்த்ரா என்ற அந்த சொகுசு விடுதியில் பணியாற்றி வந்த 19 வயதான அங்கிதா பண்டாரி என்ற இளம்பெண் கடந்த 18-ம் தேதி பணி முடிந்தும் வீடு திரும்பவில்லை.
இதனையடுத்து பெற்றோர்கள் தங்களது மகளை காணவில்லை என காவல்துறையில் புகார் அளித்துள்ளனர். அதே நேரம் ரிசார்ட் உரிமையாளரான புல்கித் தரப்பிலிருந்தும் புகார் அளிக்கப்பட்டதாக தெரிகிறது.
கொலை
தொடர்ந்து கடந்த செப்டம்பர் 21 ஆம் தேதி வழக்கு பதிவு செய்து புல்கித் ஆர்யாவை விசாரித்து வந்தனர். அதில், அவர் சரிவர பதில் அளிக்கவில்லை. அதனால், சந்தேகத்தின் அடிப்படையில் அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆய்வு செய்ததில், அந்த பெண் ரிசார்ட்டை விட்டு வெளியே செல்லவில்லை என்பது உறுதியாக தெரிந்தது.
அதன் அடிப்படையில், நடைப்பெற்ற தீவிர விசாரணையில், புல்கித் ஆர்யா, ரிசார்ட் மேலாளர் சவுரப் பாஸ்கர் மற்றும் உதவி மேலாளர் அங்கித் குப்தா ஆகிய மூவரும் இளம்பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கி, கொலை செய்து, அருகில் உள்ள நீர்நிலைகளில் வீசியது தெரிய வந்துள்ளது.
ரிசார்ட் இடிப்பு
மேலும் அவர்கள் இளம்பெண்ணை சித்திரவதை செய்து அந்த ஆடியோவை பதிவு செய்ததாகவும் , பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தை குற்றம் சாட்டுகிறார். இதனையடுத்து கைது செய்யப்பட்ட மூவரும் 14 நாட்கள் நீதிமன்ற காவலுக்கு அனுப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து புல்கித் ஆர்யாவிற்கு சொந்தமான ரிசார்ட் உரிமையை ரத்து செய்வதாக அம்மாநில முதல்வர் உத்தரவிட்டதை அடுத்து அந்த ரிசார்ட் முதல்வரின் சிறப்பு முதன்மை செயலாளர் அபினவ் குமார் தலைமையில் இடிக்கப்பட்டது.
மேலும் மாநிலத்தின் அனைத்து ரிசார்ட்டுகளையும் விசாரிக்க மாவட்ட ஆட்சியர்களுக்கு முதல்வர் உத்தரவிட்டுள்ளார். சட்டவிரோதமாக செயல்படும் ரிசார்ட்டுகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் எச்சரித்துள்ளார்.