இஸ்லாமியரை திருமணம் செய்ய போகும் பாஜக தலைவர் மகள் - கொந்தளிக்கும் இந்துத்துவா அமைப்பு
பாஜக தலைவர் மகள் இஸ்லாமியர் ஒருவரை திருமணம் செய்வதைக் கண்டித்து இந்துத்துவாஅமைப்பினர் உருவபொம்மையை எரித்து போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருமணத்திற்கு எதிர்ப்பு
உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள பவுரி மாவட்டத்தில் உள்ள கோட்வாரில் பாஜக தலைவராக இருப்பவர் யஷ்பால் பெனாம். இவர் பவுரி நகராட்சி தலைவராக தற்போது இருந்து வருகிறார்.
முன்னாள் சட்டமன்ற உறுப்பினரான யஷ்பால் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பாஜகவில் சேர்ந்தவர் ஆவார். இவரது மகள் இஸ்லாமியர் ஒருவரை மே 28-ம் தேதி குடாடியில் திருமணம் செய்ய உள்ளார்.

இந்த திருமணத்திற்கு பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சி தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. யஷ்பால் மகள் லக்னோ பல்கலைக்கழகத்தில் படித்த போது, இஸ்லாமிய மாணவர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டதாகவும், அவரையே அவர் திருமணம் செய்ய உள்ளதாகவும் கூறப்படுகிறது.
இவர்களின் திருமண பத்திரிகை சமூக ஊடகங்களில் நேற்று பரவியது. இந்த நிலையில், யஷ்பால் பெனாமின் மகள் இஸ்லாமியரை திருமணம் செய்வதற்கு இந்துத்துவா அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
தொடரும் போராட்டம்
இதன் வெளிப்பாடாக கோட்வாராவில் ஜந்தா சாக்கில் பாஜக தலைவர் யஷ்பால் பெனாமின் உருவப்பொம்மையை இன்று எரித்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
இந்தப் போராட்டத்தில் விஹெச்பி, பைரவ் சேனா, பஜ்ரங் தளம் ஆகிய அமைப்பினர் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இப்போராட்டம் குறித்து விஹெச்பி மாவட்ட செயல் தலைவர் தீபக் கவுட் கூறுகையில், இந்த திருமணத்தை நாங்கள் கடுமையாக எதிர்க்கிறோம் என்றார்.
பாஜக தலைவரின் உருவப்பொம்மையை இந்துத்துவா அமைப்பினர் எரித்து போராட்டம் நடத்தியது பவுரி மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.