மதுரை மாவட்ட பாஜக தலைவர் சரவணன் கட்சியில் இருந்து நீக்கம் - அண்ணாமலை
ராணுவ வீரர் லட்சுமணனின் உடல் டெல்லியில் இருந்து மதுரை விமான நிலையத்திற்கு கொண்டுவரப்பட்டதை அடுத்து அமைச்சர்கள், அரசியல் தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர்.
அமைச்சர் கார் மீது செருப்பு வீச்சு
அஞ்சலி செலுத்திய பிறகு அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் காரில் ராணுவ வீரரின் சொந்த ஊரான டி.புதுப்பட்டிக்கு சென்று கொண்டிருந்தார்.
அப்போது, பா.ஜ.கவினர் திடீரென அவரது காரை வழிமறித்தனர். அவர்கள் அமைச்சர் கார் மீது காலணியை வீசி அராஜகமாக நடந்து கொண்டனர்.

பின்னர் அங்கிருந்த போலீஸார் அவர்களைத் தடுத்து அப்புறப்படுத்தினர். பிறகு அமைச்சர் அங்கிருந்து காரில் சென்றார். அதனைத் தொடர்ந்து காலணி வீசியவர்கள் குறித்து போலீஸார் விசாரணை நடத்தினர்.
அதில் பா.ஜ.க-வினர் 6 பேரை போலீஸார் கைது செய்தனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பாஜகவினர் காலணி வீசியதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
பாஜகவில் இருந்து விலகும் சரவணன்
இந்நிலையில் நேற்று இரவு 12 மணிக்கு திடீரென நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனை நேரில் சந்தித்த பாஜக மதுரை மாவட்ட தலைவர் சரவணன் நேரில் சந்தித்து அண்ணே என்னை மன்னிச்சிருங்க என மன்னிப்புக் கோரினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பாஜகவின் மத அரசியல், வெறுப்பு அரசியல் தனக்கு பிடிக்கவில்லை என்றும், இனி பாஜகவில் தொடர விரும்பவில்லை எனவும் கூறினார். இன்று பதவியை ராஜினாமா செய்ய உள்ளதாகவும் சரவணன் தெரிவித்தார்.

சரவணன் கட்சியிலிருந்து நீக்கம் - அண்ணாமலை
இந்த நிலையில் இன்று காலை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில் டாக்டர் சரவணன் அவர்கள் கட்சியின் கட்டுப்பாட்டை மீறியும், கட்சிக்கு களங்கம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டு வருவதாலும் கட்சியின் அடிப்படை உறுப்பினரிலிருந்து நிரந்தரமாக நீக்கப்படுகிறார்.

ஆகவே கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அவரிடம் கட்சி சார்பாக எவ்வித தொடர்பும் வைத்துக் கொள்ள வேண்டாம் என அறிவுறுத்தப்படுவதாக தெரிவித்துள்ளார்.