இந்துக்களிடம் கோயில்களை ஒப்படையுங்கள் - பாஜக தலைவர் எல்.முருகன்
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பிரபலமான மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில் கருவறை மேற்கூரையில் நேற்று காலை 7 மணியளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
இது குறித்து மண்டைக்காடு போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கோயிலில் உள்ள 7 சி.சி.டி.வி கேமராக்களை போலீஸார் ஆய்வு செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் இன்று தமிழக பா.ஜ.க தலைவர் எல்.முருகன் மண்டைக்காடு கோயில் தீ விபத்து ஏற்பட்ட பகுதிகளை பார்வையிட்டார். அப்போது பா.ஜ.க எம்.எல்.ஏ-க்கள் நயினார் நாகேந்தின், எம்.ஆர்.காந்தி உள்பட பலர் கலந்துகொண்டனர்.
அதன் பின் எல்.முருகன் செய்தியாளர்களிடம் பேசுகையில், "மண்டைக்காடு பகவதியம்மன் கோயில் மேற்கூரை தீ பிடித்து எரிந்த சம்பவத்திற்கு கோயில் நிர்வாக அலட்சியமே காரணம். இதனால் இந்து மக்கள் மனம் புண்பட்டு உள்ளது. தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழ்நாடு முழுவதும் இதுபோன்ற கோயில்கள் உள்ளது. அவைகளை அரசு பாதுகாக்க வேண்டும். இனிமேல் எந்த கோயில்களிலும் இது போன்ற தீ விபத்துக்கள் நடக்க கூடாது.
அறநிலையத்துறை இந்து ஆலயங்களை விட்டு வெளியேற வேண்டும். சர்ச்சுகளை கிறிஸ்தவர்கள் நிர்வகிக்கின்றனர். மசூதிகளை முஸ்லீம்கள் நிர்வகிக்கின்றனர். இந்து கோயில்களை இந்துக்களே நிர்வகிக்க வேண்டும். எனவே கோயில்களை இந்துக்களிடம் ஒப்படைக்க வேண்டும்” என்றார்.