பாஜக பிரமுகர் கொலை வழக்கு - இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட்..!
பாஜக பிரமுகர் கொலை வழக்கில் சிந்தாதிரிப்பேட்டை சட்டம் ஒழுங்கு ஆய்வாளர் சிவசுப்பிரமணியன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
சென்னை சிந்தாதிரிப்பேட்டையைச் சேர்ந்தவர் பாலசந்தர் வயது 30. இவர் பாஜக எஸ்சி பிரிவு தலைவராக இருந்து வந்தார் இவரின் உயிருக்கு அச்சுறுத்தல் இருந்ததால் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் பாலச்சந்தர்,சிந்தாதிரிப்பேட்டை சாமிநாயக்கர் தெருவில் கடந்த 24-ம் தேதி ஒரு கும்பலால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
பாலச்சந்தருக்கு பாதுகாப்பு வழங்கும் பணியில் ஈடுபட்டிருந்த காவலர் பாலமுருகன் தேநீர் அருந்த சென்றிருந்த நேரத்தில் இந்த சம்பவம் நிகழ்ந்தது. இது தொடர்பாக சிந்தாதிரிப்பேட்டை போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.
குற்றவாளிகளை கண்டறிந்து கைது செய்ய, 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. இதற்கிடையே, பணியில் கவனக் குறைவாக இருந்ததாக காவலர் பாலமுருகனை பணியிடை நீக்கம் செய்து சென்னை பெருநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் நேற்று முன்தினம் உத்தரவிட்டார்.
இந்த நிலையில் மாமூல் கேட்டு மிரட்டிய வழக்கில் 22 ஆம் தேதியே பிரதீப் சஞ்சய் ஆகியோரை கைது செய்யாமல் அசட்டையாக இருந்ததற்காக சட்டம் ஒழுங்கு ஆய்வாளர் சிவசுப்பிரமணியன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.