கலவரமான பிறந்தநாள்; சொந்த ஊரிலேயே எச். ராஜாவை விரட்டியடித்த பாஜக.வினர்!
நிர்வாகிகளுக்கிடையே ஏற்பட்ட மோதலால் பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா அந்த இடத்தை விட்டு கிளம்பிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
எச். ராஜ பிறந்தநாள்
தமிழக பாஜக மூத்த தலைவர் எச். ராஜ நேற்று தனது 66வது பிறந்த நாளை கொண்டாடினார். எச் ராஜாவுக்கு, தலைவர்களும், தொண்டர்களும் சமூக வலைதளங்களிலும், நேரிலும் வாழ்த்து தெரிவித்திருந்தனர்.
பிறந்தநாளை முன்னிட்டு எச் ராஜாவின் சொந்த மாவட்டமான, சிவகங்கை, திருப்புவனம் 'மணி மந்திர விநாயகர்' கோவிலில் சிறப்பு வழிபாட்டுக்கு பாஜக நிர்வாகிகள் ஏற்பாடு செய்திருந்தனர்.
இதில் கலந்துகொள்வதற்காக இரவு அங்கு காரில் சென்றார் எச். ராஜா. அப்போது அங்கு வந்த பாஜக ஒன்றிய தலைவர் மோடி பிரபாகரன், எச். ராஜாவின் காரை மறித்து "கோயிலில் நடக்கவிருந்த சிறப்பு பூஜைகளுக்கு ஏன் தன்னை அழைக்கவில்லை? என்று கேட்டு எச். ராஜாவிடம் கேள்வியெழுப்பி வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
கடும் வாக்குவாதம்
அப்போது மோடி பிரபாகரனின் ஆதரவாளர்களும் எச். ராஜா காரை முற்றுகையிட்டனர். இதனையடுத்து எச். ராஜாவின் ஆதரவாளர்கள் அங்கு வந்து, இரு தரப்பும் கடும் வாக்குவாதம் செய்தனர். ஒரு கட்டத்தில் இருதரப்பும் எச்.ராஜா நின்றிருந்த இடத்திலேயே அடிதடியில் ஈடுபட்டு சட்டையை கிழித்து கொண்டனர்.
அப்போது எச். ராஜா அங்கிருந்த ஒரு நிர்வாகியை "நீயெல்லாம் கட்சிக்கு என்ன பண்ணிருக்க? என்று கேள்வி எழுப்பினார். இதனால் ஆத்திரமடைந்த நிர்வாகி, தான் செய்த பணிகளை எல்லாம் சத்தமாக கூறி, இதையெல்லாம் வேறு யார் செய்தது? நீங்களா செய்தது? என்று கேள்வி கேட்டார்.
இதனால் இனியும் அங்கிருப்பது சரியல்ல என கருதிய எச்.ராஜா காரில் விறுவிறுவென புறப்பட்டுச் சென்றார். இந்த மோதலால் அந்த பகுதியில் பரபரப்பு நிலவியது.