“பாஜகவை எதிர்த்தால் அவ்வளவு தான்” - பகிரங்கமாக மிரட்டிய அண்ணாமலை
தமிழக அரசியலில் யாராவது பாஜகவைக் கொச்சைப்படுத்தினால் சும்மா விடமாட்டோம் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
மேகேதாட்டுவில் அணைகட்ட முயலும் கர்நாடக அரசைக் கண்டித்தும், அதைக் கைவிட வலியுறுத்தியும் தமிழக பாஜக சார்பில் தஞ்சாவூரில் பனகல் கட்டடம் எதிரே இன்று மாநிலத் தலைவர் அண்ணாமலை தலைமையில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.
இந்த போராட்டத்தில் தமிழக பாஜக பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி, முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், சி.பி.ராதாகிருஷ்ணன், ஹெச்.ராஜா, நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

போராட்ட நிகழ்ச்சியில் உரையாற்றிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, தமிழக முதல்வர் சாராயத்துறை அமைச்சரைத் தன் பக்கத்தில் வைத்துக்கொள்கிறார். ஆனால் விவசாயத்துறை அமைச்சரை தூரமாகவே வைத்திருக்கிறார். இதுவே தமிழக அரசின் செயல்பாடுகளை உணர்த்துவதற்கு ஒரு சான்று என சரமாரியாக அரசை விமர்சித்தார்.
மேலும் தமிழக அரசியலில் யாராவது பாஜகவைக் கொச்சைப்படுத்தினால் சும்மா விட மாட்டோம். மீறிப்பேசினால் அவர்களின் பிசினஸில், அடிப்படையில் கைவைப்போம். அவர்கள் செய்யும் துரோகத்தைப் பட்டியலிட்டு பதிலடியை சம்மட்டி அடிபோலக் கொடுப்போம் என்றும் அண்ணாமலை கூறினார்.