காமராஜரின் பெயரை சொல்லி பிச்சை எடுக்கும் காங்கிரஸ் - குஷ்பு கடும் விமர்சனம்
மக்கள் கூட்டத்தை சேர்ப்பதற்காக பிரபலத்தின் முகம் வேண்டும் என்பதற்காக கமல்ஹாசனுக்கு கூட்டணியில் இடம் கொடுக்கப்பட்டுள்ளதா..? என குஷ்பு வினவி உள்ளார்.
குஷ்பு கேள்வி
பாஜகவின் தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் குஷ்பு வேலூர் மாவட்டம், தொரப்பாடியில் ஏ.சி.சண்முகத்தின் புதிய நீதிக்கட்சியின் நிகழ்ச்சி ஒன்றில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
நிகழ்ச்சியில் குஷ்பு பேசும் போது, தமிழகம் போதை பொருளால் பாதிக்கப்பட்டு வருவதாக குறிப்பிட்டு, அதனை தடுக்கும் வகையில் பாஜக மற்றும் ஏ.சி.சண்முகம் சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது என்றார். திமுக அவர்கள் செய்த தவறால் தினம் தினம் பயத்திலேயே இருக்கின்றனர் என்று விமர்சித்து, மடியில் கனம் இருந்தால் பயம் இருக்க தான் செய்யும் என்றும் கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், கடந்த 60 ஆண்டுகளில் காங்கிரஸ் கட்சியால் செய்ய முடியாததை பாஜக 10 ஆண்டுகளில் செய்து முடித்திருக்கிறது என்று சுட்டிக்காட்டி, பல துறைகளில் உலகளவில் இந்தியா முதல் 5 இடங்களுக்குள் உள்ளது என குறிப்பிட்டார்.
பிச்சை எடுக்கிறது
கடந்த 1967க்கு பின்னர் தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியால் தற்போது வரை சொந்த காலில் நிற்க முடியாததன் காரணம் என்ன? என்று வினவிய குஷ்பு, தற்போது வரை காங்கிரஸ் காமராஜரின் பெயரை சொல்லி தான் பிச்சை எடுக்கிறது என காட்டமான விமர்சனத்தை முன்வைத்த குஷ்பு, திமுக, அதிமுக என மாறி மாறி கூட்டணி சேர்கின்றனர் என்று கூறினார்.
மேலும், உங்களுக்கு தைரியம் இருந்தால் தமிழகத்தில் தனித்து போட்டியிட்டு வெற்றி பெற வேண்டியது தானே என்ற கேள்வியை எழுப்பி, மக்கள் கூட்டத்தை சேர்ப்பதற்காக பிரபலத்தின் முகம் வேண்டும் என்பதற்காக கமல்ஹாசனுக்கு கூட்டணியில் இடம் கொடுக்கப்பட்டுள்ளதா..? என குஷ்பு வினவி உள்ளார்.