நாடு முழுவதும் தாமரை; யூடியூப், ட்விட்டர் மூலம் வளர்ந்த கட்சி இல்லை - பிரதமர் மோடி பெருமிதம்
தொண்டர்களின் கடின உழைப்பால் வளர்ந்த கட்சி பாஜக என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
தேசிய கட்சி
டெல்லியில் பாஜக அலுவலகத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார். அப்போது பேசிய அவர், “2 மக்களவை தொகுதிகளுடன் தொடங்கிய பாஜகவின் பயணம் தற்போது 303 தொகுதிகளுக்கு பரவியுள்ளது. நாட்டின் 4 திசைகளிலும் பரவிய ஒரே தேசிய கட்சியாக பாஜக உள்ளது.
1984ல் இந்த நாடு மிகவும் துயரமான நேரத்தை அனுபவித்தது. அப்போது, நாம் அனைவரும் அந்த அலையில் முற்றிலும் அழிந்தோம், ஆனால் நாங்கள் மன உளைச்சலுக்கு ஆளாகவில்லை, மற்றவர்களைக் குறை கூறவில்லை. நமக்கு மிக வலிமையான ஜனநாயக அடித்தளம் உள்ளது.
மோடி பேச்சு
அதை தடுப்பதற்காகவே ஜனநாயக அமைப்பை தாக்குகிறார்கள். ஜனநாயக அமைப்புகள் தங்களது கடமைகளை செய்தால் அவர்கள் மீது விமர்சனங்கள் எழுகின்றன. கடந்த 70 ஆண்டுகளில் ஊழல்வாதிகள் மீது இவ்வளவு நடவடிக்கை எடுப்பது இதுவே முதல்முறை. இதை இன்னும் தீவிரமாக்கினால் சிலர் வருத்தமடைவார்கள்.
இன்னும் சிலர் கோபமடைவார்கள். ஆனால், ஊழல்வாதிகள் மீது எடுக்கப்படும் நடவடிக்கை நிச்சயம் நிறுத்தப்படாது. இவர்கள் மீது நடவடிக்கை எடுத்தால், உடனே ஊழலுக்கு எதிராக பிரச்சாரம் செய்ய ஆரம்மித்து விடுகிறார்கள்.
பாஜக தொலைக்காட்சி மூலமோ, செய்தித்தாள் மூலமோ வரவில்லை. ட்விட்டர் கணக்குகள் மூலமோ அல்லது யூட்டியூப் மூலமோ வரவில்லை. தொண்டர்களின் கடின உழைப்பால் வளர்ந்த கட்சி இதுவாகும்” என தெரிவித்தார்.