பாஜகவுக்கு ஊழலைப் பற்றிப் பேச எந்தத் தகுதியும் இல்லை - அமைச்சர் மனோ தங்கராஜ் காட்டமான பதில்
அண்ணாமலை சொத்து பட்டியலை வெளியிட்ட நிலையில் கருத்து தெரிவித்துள்ள அமைச்சர் மனோ தங்கராஜ் இது மக்களை திசை திருப்பும் முயற்சி என காட்டமாகத் தெரிவித்துள்ளார்.
பாஜகவுக்கு தகுதியில்லை
நாகர்கோவிலில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் மனோ தங்கராஜ், “பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள பட்டியலைப் பற்றி நாங்கள் கவலைப்படவில்லை.
பாஜகவுக்கு ஊழலைப் பற்றிப் பேச எந்தத் தகுதியும் இல்லை. பாஜகவுக்கு, தமிழ்நாட்டில் நடந்த மிகப்பெரிய நிதி நிறுவன மோசடியில் பங்கு உண்டு. கர்நாடகாவில் எடியூரப்பா தலைமையில் நடக்கும் ஆட்சியிலும், ஏராளமான குற்றச்சாட்டுகள் உள்ளன.
நீரவ் முதல் அதானிவரை நடந்து வரும் ஊழல்கள் அனைவருக்கும் தெரிந்த பட்டவர்த்தனமான விஷயம்தான். இப்படியெல்லாம் ஊழலுக்குப் பேர் போன பாஜகவுக்கு ஜனநாயக ரீதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியைப் பற்றிப் பேச எந்த தகுதியும் இல்லை.
பாஜக நாடகத்தை அரங்கேற்றுகிறது
ஒருவேளை அவர்கள் ஊழலுக்கு எதிரானவர்கள் எனக் கூறினால் பாஜக ஆட்சி செய்யும் மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் மற்றும் தமிழகத்தில் உள்ள பாஜக நிர்வாகிகளின் ஊழல் பட்டியலையும் வெளியிடட்டும்.
கியாஸ், பெட்ரோல், டீசல் என தொடர் விலை உயர்வினால் கடுமையான பாதிப்பை அடைந்திருக்கும் மக்களைத் திசைத்திருப்பவே பாஜக இப்படி நாடகத்தை அரங்கேற்றுகிறது ”என்றார்.