பாஜக ஆட்சியா? 2 நாள் பொறுத்திருங்கள் - துரை முருகன் பரபரப்பு பேட்டி
தங்களை யாராலும் அசைக்க முடியாது என எண்ணிக் கொண்டிருந்த பாஜகவுக்கு தேர்தல் மூலம் மக்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர் என்று அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
கதிர் ஆனந்த்
வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் திமுக வேட்பாளர் டி.எம்.கதிர் ஆனந்த் 2 லட்சத்து 15 ஆயிரத்து 702 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். அவருக்கு தொகுதியின் தேர்தல் நடத்தும் அலுவலரும், வேலூர் மாவட்ட ஆட்சியருமான வி.ஆர்.சுப்புலட்சுமி வெற்றிச் சான்றிதழை வழங்கினார்.
அப்போது, நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன், வேலூர் சட்ட மன்ற உறுப்பினர் ஏ.பி.நந்தகுமார், ப.கார்த்திகேயன், அமலு விஜயன் உள்ளிட்டோர் உடனிருந்தனர். பின்னர், அமைச்சர் துரைமுருகன் செய்தியாளர்களிடம் கூறியது, இன்றைய அரசியல் சூழலில் முதல்வர் மு.க.ஸ்டாலின் திறமையால் நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்றுள்ளோம்.
திராவிட கட்சி
திராவிட கொள்கையை கொண்ட கட்சிகளுக்கு தான் தமிழகத்தில் இனி எதிர்காலம் என்பதை இந்தத் தேர்தல் முடிவு உணர்த்தியுள்ளது.மேலும், அபரிமிதமான செல்வக்குடன் தங்களை ஆட்டி அசைக்க முடியாது என்று பாஜக எண்ணிக் கொண்டிருந்தது. அப்படி அல்ல உங்களையும் கேள்வி கேட்க முடியும் என்று இந்த தேர்தல் மூலம் மக்கள் பாஜக அரசுக்கு எச்சரிக்கை விடுத்திருக்கின்றனர்.
எனது மகன் (கதிர் ஆனந்த்) நாடாளுமன்றத்தில் பணியை தொய்வின்றி செய்ய வேண்டும், தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களை அணுகி அவர்களின் குறைகளை நிவர்த்தி செய்ய வேண்டும், என்றைக்கும் மக்களின் தோழனாக தன்னை நினைத்து பணியாற்ற வேண்டும் என்பதே எனது விருப்பம்.
அண்ணாமலை
கோவையில் பாஜக தலைவர் அண்ணாமலை தோல்வியுற்றது மக்கள் விருப்பம். இதில் நாங்கள் எதுவும் கருது சொல்ல விரும்பவில்லை. திமுக ஆட்சி மக்களை கவர்ந்து உள்ளதாலே அதிக வாக்கு வித்தியாசத்தில் திமுக வெற்றி பெற்றுள்ளது. இந்த ஆட்சியை மக்கள் நம்புகின்றனர் என்பதே அர்த்தம். மத்தியில் திமுக கூட்டணி கட்சி ஆட்சி அமையும் பட்சத்தில் மத்திய அரசுடன் இணக்கமாக இருந்து மக்களின் நலனுக்காக செயல்படுவோம்.
எதிர்கட்சியாக இருக்கும் பட்சத்தில் நல்ல திட்டங்களை வரவேற்போம், மக்கள் நலனுக்கு எதிராக உள்ள திட்டங்களை எதிர்ப்போம் என கூறினார்.
இதனிடையே மீண்டும் பாஜக ஆட்சி அமைக்கும் சூழல் வந்தால் என கேள்வி எழுப்பப்படும் பொழுது, இதற்கு நீங்கள் இன்னும் 2, 3 நாட்கள் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும் என தெரிவித்தார்.