திமுகவுக்கு தூக்கம் தொலைந்து விட்டது; எனது வாக்குறுதி இதுதான் - சேலத்தில் பிரதமர் மோடி பேச்சு!
தமிழ் மொழியின் பெருமையை உலகம் அறிய செய்வேன் என்று பிரதமர் மோடி வாக்குறுதி அளித்துள்ளார்.
பொதுக்கூட்டம்
மக்களவை தேர்தலையொட்டி நாடு முழுவதும் பிரதமர் மோடி சுற்றுப்பயணம் மேற்கொண்டு பிரசாரம் செய்து வருகிறார். அந்தவகையில் நேற்று கோவையில் பிரதமர் மோடியின் "ரோட் ஷோ" நடைபெற்றது.
இந்நிலையில் இரண்டாவது நாளாக மீண்டும் தமிழகம் வந்த அவர், சேலத்தில் கூட்டணிக் கட்சிகள் கலந்து கொண்ட பாஜக பொதுக் கூட்டத்தில் பங்கேற்றார். அப்போது பேசிய பிரதமர் மோடி "எனக்கு கிடைத்த ஆதரவால் தி.மு.க.விற்கு தூக்கம் தொலைந்துவிட்டது.
நாடாளுமன்ற தேர்தலில் 400-க்கும் மேற்பட்ட இடங்களில் தேசிய ஜனநாயக கூட்டணி வெல்ல வேண்டும். கட்சிக்காக நேர்மையாக உழைத்தவர்களை படுகொலை செய்து விட்டார்கள்.
எனது வாக்குறுதி
ஆடிட்டர் ரமேஷ் உள்பட பா.ஜ.க நிர்வாகிகள் கொலை செய்யப்பட்டதை மறக்க முடியாது. முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவை தி.மு.க.வினர் எவ்வளவு இழிவுபடுத்தினர் என்பதை நினைத்துப்பாருங்கள்.
தமிழ்நாட்டில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளது. இந்து மதத்தை விமர்சிக்கும் இந்தியா கூட்டணி மற்ற மதத்தையோ, மற்ற மதத்தினரையோ விமர்சிப்பதில்லை. உலகின் மிகவும் மூத்த மொழி தமிழ். இந்தியாவுக்கு தமிழ் மொழியால் பெருமை. தமிழ் மொழியின் பெருமையை உலகம் அறிய செய்வேன். இது எனது வாக்குறுதி " என்று தெரிவித்தார்.