குமாரசாமியின் JDU'வுடன் கூட்டணி அமைத்தது பாஜக....கர்நாடகாவில் I.N.D.I.A கூட்டணிக்கு சிக்கல்..!
கர்நாடக மாநிலத்தில் குமாரசாமியின் மதசார்பற்ற ஜனதா தளத்துடன் பாஜக கூட்டணியை உறுதிப்படுத்தியுள்ளது.
2024 நாடாளுமன்ற தேர்தல்
வரும் 2024-ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக உள்ளது. 10 ஆண்டுகால ஆட்சியை தக்கவைத்து கொள்ள பாஜகவும், மீண்டும் ஆட்சியை பிடித்திட காங்கிரஸ் கட்சியும் பல முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது.
இதில் காங்கிரஸ் எதிர்கட்சிகளை இணைத்து வலுவான கூட்டணியை அமைத்துள்ளது. I.N.D.I.A என பெயரிடப்பட்டுள்ள இந்த கூட்டணியில் திமுக, சமாஜ்வாதி கட்சி, திரிணாமுல் காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சி, தேசியவாத காங்கிரஸ், ஜனதா தளம், சிவசேனா, மார்க்சிஸ்ட் கம்யூனிட்ஸ்ட் போன்ற பல்வேறு மாநிலங்களின் முக்கிய கட்சிகள் இணைந்துள்ளன.
பாஜகவின் வியூகம்
இது பாஜகவிற்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தி இருக்கிறது.குறிப்பாக தென்னிந்தியாவை பொறுத்தமட்டில் தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா ஆகிய 5 மாநிலங்களை இணைத்து 130 இடங்கள் இருக்கும் நிலையில், தென்னிந்தியாவில் கணிசமான இடங்களில் கைப்பற்றுவது மிகவும் முக்கியமானதாகும். இதில் தமிழகம், கேரளாவில் பாஜகவிற்கு எதிர்ப்புகள் இருக்கும் நிலையில், சென்ற நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவிற்கு தென்னிந்தியாவில் கை கொடுத்த ஒரே மாநிலம் கர்நாடகா.
அங்கு மொத்தமுள்ள 28 இடங்களில் பாஜக 25 இடங்களை கைப்பற்றி இருந்தது குறிப்பிடத்தக்கது. இம்முறை தேர்தலிலும் தங்கள் பலத்தை நிரூபிக்க பாஜக தற்போது அம்மாநில மதசார்பற்ற ஜனதா தள கட்சியுடன் கூட்டணி அமைத்திருக்கிறது. இந்த கூட்டணியில் தற்போது கர்நாடகாவில் மதசார்பற்ற ஜனதா தளக்கட்சிக்கு 4 இடங்கள் ஒதுக்கவும் முடிவு செய்யப்பட்டு, கூட்டணி உறுதி செய்யப்பட்டுள்ளது.