கீழடியில் மாணவர்களை வெயிலில் காத்திருக்க வைத்த நடிகர் சூர்யா மீது பாஜகவினர் போலீசில் புகார்
கீழடி அருங்காட்சியகத்தை பார்வையிட்ட நடிகர் சூர்யா விதிகளை மீறியதாக கூறி தென் மண்டல காவல்துறை ஐஜி அஸ்ரா கார்க்கிடம் மதுரை பாஜகவினர் புகார் அளித்துள்ளனர்.
கீழடி அருங்காட்சியகத்திற்கு சென்ற நடிகர் சூர்யா
அண்மையில் சிவகங்கை மாவட்டம் கீழடி அருங்காட்சியகத்தை சுமார் ரூ.18.43 கோடி மதிப்பீட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
இதையடுத்து நாள்தோறும் ஏராளமான மக்கள், திரைப் பிரபலங்கள், வெளிநாட்டவர்கள், ஆராய்ச்சியாளர்கள் எனப் பலரும் அருங்காட்சியகத்துக்கு வருகை தந்து கண்டுகளிக்கின்றனர்.
அண்மையில் நடிகர் சூர்யா மற்றும் அவரது மனைவி ஜோதிகா,மற்றும் குடும்பத்தினர் கீழடி அருங்காட்சியகத்திற்கு சென்று பார்வையிட்டனர். அவர்களுடன் மதுரை எம்.பி.சு.வெங்கடேசன் உடன் சென்று இருந்தார்.
வெயிலில் காத்திருந்த மாணவர்கள்
அப்போது பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்படாமலும் பள்ளி மாணவர்கள் வெயிலில் ஒரு மணி நேரம் வெயிலில் காத்திருந்தனர்.
பின்னர் நடிகர் சூர்யா குடும்பத்தினர் சென்ற நிலையில் பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் அருங்காட்சியகத்தை பார்வையிட அனுமதிக்கப்பட்டனர்.
நடிகர் சூர்யா, ஜோதிகா குடும்பத்தினருக்காக பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் வெயிலில் காத்திருக்க வைத்ததற்கு கண்டனங்கள் எழுந்தன.
நடிகர் சூர்யா மீது போலீசில் புகார்
இந்த நிலையில் கீழடி அருங்காட்சியகத்தை பார்வையிட்ட நடிகர் சூர்யா விதிகளை மீறியதாக கூறி தென் மண்டல காவல்துறை ஐஜி அஸ்ரா கார்க்கிடம் மதுரை பாஜகவினர் புகார் அளித்துள்ளனர்.
பாஜகவினர் அளித்துள்ள புகாரில் மதுரை எம்.பி சு.வெங்கடேசன் தனிப்பட்ட நலனுக்காக நடிகர் சூர்யா, ஜோதிகா உள்ளிட்டோரை விதிகளை மீறி உள்ளே அழைத்துச் சென்றாக குற்றம் சாட்டியுள்ளனர்.
மேலும் மாணவர்களை வெயிலில் காத்திருக்க வைத்ததாக கூறியுள்ள பாஜகவினர் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.