சென்னையில் பாஜக நிர்வாகி ஓட ஓட வெட்டிக்கொலை ... அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு

Attempted Murder BJP K. Annamalai
By Petchi Avudaiappan May 25, 2022 01:38 AM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in தமிழ்நாடு
Report

சென்னையில்  பாஜக நிர்வாகி வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

சென்னை கீழ்ப்பாக்கம் நியூ மண்டபம் சாலையைச் சேர்ந்த பாலசந்தர் (34) என்பவர் பாஜக பட்டியலின பிரிவு மத்திய சென்னை மாவட்ட தலைவராக பதவி வகித்து வந்தார். இவரது பெற்றோர் வீடு சிந்தாதிரிப்பேட்டை பகுதியில் இருக்கிறது. இதனால் பாலசந்தர் அடிக்கடி இங்கு வந்து செல்வது வழக்கம். அதேசமயம் ஏற்கனவே இவருக்கு கொலை மிரட்டல் இருப்பதால் தனியாக போலீஸ் பாதுகாப்பை பெற்றுள்ள நிலையில் எப்போதும் காவலருடன்  செல்வார்.

இதனிடையே நேற்றிரவு சிந்தாதிரிப்பேட்டை சாமி நாயக்கன் தெருவில் பாலசந்தர் பைக்கில் வந்துள்ளார்.  அவருடன் வந்த பாதுகாப்பு போலீஸ் பாலகிருஷ்ணன் டீ குடிக்கச் சென்றுள்ளார். அப்போது பைக்கில் சாலையோரமாக நின்றிருந்த பாலச்சந்தரை அடையாளம் தெரியாத 6 பேர் கொண்ட கும்பல் சரமாரியாக வெட்டிக் கொலை செய்து விட்டு தப்பி ஓடினர்.

இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தகவலறிந்து  சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சிந்தாதிரிப்பேட்டை போலீசார் உயிரிழந்த பாலசந்தரின் உடலைக் கைப்பற்றி  பிரேத பரிசோதனைக்காக ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்னை காவல் வடக்கு மண்டல கூடுதல் ஆணையர் அன்பு, கிழக்கு மண்டல இணை ஆணையர் பிரபாகர், திருவல்லிக்கேணி துணை ஆணையர் பகலவன் ஆகியோர் நேரில் வந்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகள் கைப்பற்றி ஆய்வு மேற்கொண்டனர். மேலும் தடயவியல் துறையினரும் தடயங்களை சேகரித்தனர்.

கொலையாளிகளை பிடிக்க 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ள  நிலையில் சிந்தாதிரிப்பேட்டை பகுதியில் பாலசந்தரின் உறவினர்கள் துணிக்கடை நடத்தி வருகின்றனர். அந்த கடையில் அதே பகுதியைச் சேர்ந்த பிரதீப் என்பவர் மாமூல் கேட்டு தொல்லை கொடுத்து வந்ததால் அவர் காவல்துறையிடம் புகார் அளித்தார். பிரதீப்பை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். 

இதன் காரணமாக பிரதீப்பின் தந்தை மோகன் என்ற தர்கா மோகனுக்கும், பாலசந்தருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்ததாக சொல்லப்படுகிறது. இதற்கிடையில் பிரதீப் கடந்த 10 தினங்களுக்கு முன்பு சிறையில் இருந்து வெளியே வந்துள்ளார். ஆனால் நேற்று மீண்டும் பாலசந்தர் உறவினரின் துணிக்கடைக்கு சென்று அங்குள்ளவர்களை மிரட்டியதால் மீண்டும் பிரதீப் மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

இதனால் ஆத்திரமடைந்த பிரதீப் தனது தந்தை மோகனுடன் சேர்ந்து பாலசந்தரை கொலை செய்ய சதி திட்டம் தீட்டி நேற்று அவர்கள் இருவர் உட்பட 6 பேருடன் சேர்ந்து பாதுகாப்பு போலீஸ் இல்லாத சமயத்தில் பாலசந்தரை கொலை செய்து விட்டு தப்பியோடியதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. எனினும் குற்றவாளிகள் அனைவரும் கைது செய்யப்பட்ட பின்னரே இந்த கொலைக்கான காரணம் தெரிய வரும் என காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.