தேர்தல் பொறுப்பிலிருந்து விலகுகிறேன்: அண்ணாமலை
2026 சட்டப்பேரவை நெருங்கும் நிலையில், பாஜக தேர்தல் பொறுப்புகளில் இருந்து விலகுவதாக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார்.
சிங்காநல்லூர், விருகம்பாக்கம் உள்ளிட்ட ஆறு தொகுதிகளுக்கு சட்டமன்ற தேர்தல் பொறுப்பாளராக அண்ணாமலை நியமிக்கப்பட்டிருந்த நிலையிலேயே தான் பொறுப்பில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

தமிழக பாஜகவில் பலரும் தலைவர்களாக இருந்திருந்தாலும் அண்ணாமலை அதில் முக்கியமானவராக கருதப்படுகின்றார். காரணம் தமிழ்நாட்டில் பாஜகவை வளர்த்ததில் இவருக்கு முக்கிய பங்குண்டு.
எடப்பாடி பழனிச்சாமிக்கும் இவருக்கும் ஏற்பட்ட பிரச்சினையால், அண்ணாமலையை தூக்கிவிட்டு நயினார் நாகேந்திரனை தமிழக பாஜக தலைவராக நியமித்தது பாஜக தலைமை.
அண்ணாமலை திடீர் அறிவிப்பு

அதன் பின்னர் டெல்லி சென்று தேசிய அரசியலில் அண்ணாமலை ஈடுபடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சட்டமன்றத் தேர்தல் பொறுப்பிலிருந்து விலகுவதாக அண்ணாமலை அறிவித்திருக்கிறார்.
தந்தைக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் அவரை கவனித்துக் கொள்வதற்கு பொறுப்பில் இருந்து விலகுவதாக குறிப்பிட்டுள்ளார்.
மேலும், செய்தியாளர்களுடன் பேசிய அண்ணாமலை, ”பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு ஏற்றுக்கொண்ட 16-வது நிதிக்குழுவின் பரிந்துரை தமிழகம் பலன் அடைந்துள்ளது.
குறிப்பாக வரி பகிர்வில் நாட்டின் வளர்ச்சிக்கு 10% நிதி ஒதுக்கீடு செய்யப்படுவது, இது எதிர்கட்சிகளின் வாயை அடைத்துள்ளது.
திமுக அமைச்சர்களை அழைத்து அண்ணாவை பற்றி 10 வரிகள் எழுதச் சொன்னால் யாருக்கும் எழுதத் தெரியாது. இன்றைக்குகூட தேர்வு வைத்து பாருங்கள், யாருக்கும் தெரியாது.
அண்ணா... அண்ணா... என்று அவர் பிறந்தநாள், நினைவுநாளில் பேசுவதை மட்டுமே வாடிக்கையாக வைத்துள்ளனர். அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில்தான் தேர்தலை சந்திக்கப் போகிறோம்.
அவர்தான் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் முதல்வர் வேட்பாளர். திமுக - காங்கிரஸ் கூட்டணி உடைந்த கூட்டணி போன்றது. விஜய் கட்சிக்கு என்ஜினே இல்லை.
விஜய் கட்சியின் என்ஜினை ஓட்ட யார் இருக்கிறார்? மக்களை சிந்திக்க வைக்கும் வகையில் விஜய்யின் பேச்சு இல்லை. விசில் மற்றும் கைதட்டலுக்காகவே விஜய்யின் பேச்சுகள் இருக்கின்றன” எனத் தெரிவித்துள்ளார்.