பாஜக சர்வாதிகார ஆட்சியை நிறுவ பார்க்கிறது - எதிர்க்கட்சி தலைவர்களுக்கு மம்தா கடிதம்

stalin Banerjee sonia pawar kejriwal
By Jon Mar 31, 2021 11:42 AM GMT
Report

இந்தியாவில் ஒற்றைக் கட்சி சர்வாதிகார ஆட்சி முறையை கொண்டு வர பாஜக வேலை செய்து வருவதாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பேனர்ஜி தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் இதை குறிப்பிட்டுள்ளார். தமிழகத்தோடு சேர்த்து கேரளம், மேற்கு வங்கம், அஸ்ஸாம் உள்ளிட்ட மாநிலங்களுக்கும் சட்டமன்ற தேர்தல் நடைபெற்று வருகிறது.

இதில் தமிழகத்தை விடவும் பாஜக மேற்குவங்கத்தில் அதிக கவனம் செலுத்தி வருகிறது. கடந்த நாடாளுமன்ற தேர்தலில் மேற்கு வங்கத்தில் 18 இடங்களை வென்று இரண்டாவது இடத்தைப் பிடித்தது பாஜக. இந்த முறை எப்படியாவது ஆட்சியைப் பிடித்துவிட வேண்டும் என்கிற முனைப்பில் உள்ளது. இதனால் பாஜகவுக்கும் திரினாமுல் காங்கிரசுக்கும் இடையே கடுமையான போட்டி நிலவி வருகிறது.

கருத்துக் கணிப்புகளும் திரினாமுல் காங்கிரசுக்கு வெற்றி வாய்ப்பு சற்று அதிகமாக இருந்தாலும் கடுமையான போட்டி நிலவும் எனத் தெரிவித்துள்ளன. இந்நிலையில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பேனர்ஜி சோனியா காந்தி, ஸ்டாலின் உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் பாஜகவுக்கு எதிராக ஒருங்கிணைந்த வலுவான கூட்டணியை உருவாக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

 

 மேலும் அதில், “சமீபத்தில் டெல்லி அரசின் அதிகாரத்தைப் பறித்து ஆளுநருக்கு தான் அதிகாரம் என மத்திய அரசு சட்டம் இயற்றியுள்ளது. இது கூட்டாட்சி முறையை குழி தோண்டி புதைக்கும் செயல். சிபிஐ, அமலாக்கத் துறை, வருமான வரித்துறை போன்றவற்றை அரசியல் ஆதாயத்திற்காக எதிர்க்கட்சிகளுக்கு எதிராக பயன்படுத்தி வருகிறது. மாநில அரசுகளுக்கான அதிகாரத்தை பறித்து வெறும் முனிசிபாலிட்டி போல நடத்த நினைக்கிறது.

  பாஜக சர்வாதிகார ஆட்சியை நிறுவ பார்க்கிறது - எதிர்க்கட்சி தலைவர்களுக்கு மம்தா கடிதம் | Bjp Establish Dictatorial Regime Mamata Leaders

மாநில அரசுகளுக்கான நிதி ஆதாரத்தை மத்திய அரசு முறையாக வழங்குவதில்லை. பாஜக ஆளாத மாநில அரசுகளை இதன் மூலம் பழி வாங்கி வருகிறது. மத்திய - மாநில அரசுகளுக்கு இடையே ஆன உறவு தற்போது போல மோசமாக இருந்தது இல்லை. இந்தியாவில் ஒற்றைக் கட்சி சர்வாதிகார ஆட்சி முறையை நிறுவ பார்க்கிறது.

அதற்கு எதிராக ஒரு வலுவான கூட்டணியை நாம் உருவாக்க வேண்டும். தேர்தல் முடிந்த பிறகு இது தொடர்பாக கலந்து ஆலோசிக்கத் தயார்” என்றும் தெரிவித்துள்ளார்.