கோவை தடுப்பூசி மையத்தில் திமுக பாஜக இடையே வாக்குவாதம்...
கோவை தடுப்பூசி மையத்தின் முன்பாக பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்து பா.ஜ.க சார்பில் பேனர் வைக்கப்பட்டதால் திமுக மற்றும் பாஜகவினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
கோவை ராஜ வீதியில் உள்ள அரசு மகளிர் பள்ளியில் பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்துவதற்கான தடுப்பூசி மையம் உருவாக்கப்பட்டுள்ளது. இன்று காலை தடுப்பூசி செலுத்துவதற்கான ஏற்பாடுகள் இங்கு செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் பள்ளியின் முகப்பில், உக்கடம் பாஜக உறுப்பினர்கள் சார்பில் பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்து மோடி, வானதி சீனிவாசன் புகைபடங்களுடன் பேனர் வைக்கப்பட்டிருந்தது.
தடுப்பூசி மையத்திற்கு வந்த திமுகவினர் பேனரை அகற்ற பாஜக தொண்டர்களிடம் வலியுறுத்தினர். ஆனால் பேனரை அகற்ற பா.ஜ.கவினர் மறுத்தனர். இதனால் இரு தரப்பினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் இப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பெரிய கடைவீதி காவல்துறையினர் இருதரப்பினரையும் சமாதானப்படுத்தி பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதனால், தடுப்பூசி செலுத்தும் பணிகள் சிறிது நேரம் தடைபட்டது. இந்நிலையில் பேச்சிவார்த்தைக்கு பின்னர் பா.ஜ.கவினர் வைத்த பேனர் அகற்றப்பட்டது. தடுப்பூசி மையத்தின் முன்பு இரு தரப்பினரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.