முதல் கொரோனா தடுப்பு மருந்தை பிரதமர் மோடி போட்டுக்கொள்ள வேண்டும்: காங்கிரஸ் சவால்

bjp-corona-pcr-vaacine
By Jon Jan 04, 2021 01:15 PM GMT
Report

கோவிஷீல்டு மற்றும் கோவேக்சின் தடுப்பு மருந்துகளுக்கு மத்திய அரசு அவசர அனுமதி வழங்கியுள்ளது. ஆனால் முறையான பரிசோதனை இல்லாமலே அவசர கதியில் அனுமதி வழங்கியுள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சுமத்தி வருகின்றன.

இந்த குழப்பங்களுக்கு மத்தியில் முதல் கொரோனா தடுப்பூசியை பிரதமர் மோடி போட்டுக்கொண்டு நாட்டுமக்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த வேண்டும் என்று காங்கிரஸ் சவால் விடுத்துள்ளது.

சீரம் இன்ஸ்ட்டியூட் ஆப் இந்தியா நிறுவனம் தயாரிக்கும் கோவிஷீல்டு, ஐசிஎம்ஆர் மற்றும் புனேயில் உள்ள வைரலாஜி நிறுவனத்துடன் இணைந்து பாரத் பயோடெக் நிறுவனம் தயாரிக்கும் கோவாக்சின் தடுப்பு மருந்தையும் அவசரகாலத்துக்கு பயன்படுத்திக்கொள்ள மத்திய மருந்துக் கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதி வழங்கியது.

இதற்கு பெருமளவில் வரவேற்பு கிடைத்துள்ள நிலையில், தடுப்பூசியின் நம்பகத்தன்மை குறித்து காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கேள்வியெழுப்பி உள்ளன. காங்கிரஸ் மூத்த தலைவர் சசி தரூர் கூறுகையில், 'கொரோனா தடுப்பூசி கோவாக்சின் மருந்துக்கு அவசர ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இது இன்னும் 3ம் கட்ட பரிசோதனையில் இருப்பதால் முன்கூட்டியே வழங்கியுள்ளது ஆபத்தானது.

தடுப்பூசியின் முழு பரிசோதனைகளும் முடியும் வரை காத்திருக்குமாறு மத்திய சுகாதார அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்தனை கேட்டுக்கொள்கிறேன்,' எனக்கூறினார். இந்நிலையில் பீஹார் மாநில காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் அஜித் சர்மா கூறியதாவது: புதிய ஆண்டில் இரண்டு தடுப்பூசிகள் கிடைத்ததில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்.

ஆனால் இது குறித்து மக்களிடையே சந்தேகம் உள்ளது. இந்த சந்தேகத்தை நீக்குவதற்காக, ரஷ்யாவிலும் அமெரிக்காவிலும் உள்ள அதன் தலைவர்கள் முதல் தடுப்பூசியை எடுத்துக்கொண்டதைப்போல பிரதமர் மோடியும் முதல் தடுப்பூசியை போட்டுக்கொண்டு மக்களின் நம்பிக்கையை வெல்ல வேண்டும்” என்றார். ஆனால் தடுப்பூசி விவகாரத்தில் காங்கிரஸ் அரசியல் செய்வதாக பா.ஜ., குற்றச்சாட்டு தெரிவித்துள்ளது.