பரபரக்கும் களம்..! இன்று பீகார் பாஜக செயற்குழு கூட்டம்..! கூட்டணிக்காக பாஜக வைக்கும் கண்டிஷன்..!
அதிருப்தி காரணமாக, ராஷ்ட்ரிய ஜனதா கூட்டணியை முறித்து கொள்ளும் முடிவில், பீகார் மாநில முதல்வர் நிதிஷ் குமார் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
நிதிஷ் குமார்
2020-ஆம் ஆண்டு நடைபெற்ற பீகார் மாநில சட்டமன்ற தேர்தலில் மொத்தமுள்ள 243 தொகுதிகளில் பாஜக 74, லல்லு பிரசாத் யாதவின் ராஷ்ட்ரிய ஜனதா தளம் 75, நிதிஷ் குமாரின் ஜனதா தளம் 43, காங்கிரஸ் 19 இடங்களை பிடித்தனர்.
பெரும்பான்மையான 122 இடங்களை எந்த கட்சியும் கைப்பற்றிடாத நிலையில், பாஜகவின் கூட்டணியில் முதல்வரானார் நிதிஷ் குமார். பிறகு, ஆகஸ்ட் 2022-ஆம் ஆண்டு கூட்டணியை முறித்து தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்த அவர், ராஷ்ட்ரிய ஜனதா தளம், காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் இணைந்து கூட்டணி அமைத்து மீண்டும் முதல்வரானார்.
பாஜக நிபந்தனை
இந்நிலையில், தற்போது நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் சூழலில், கூட்டணியை முறிக்கும் எண்ணத்தில் நிதிஷ் குமார் இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.
மீண்டும் பாஜகவுடன் கூட்டணி அமைத்து முதல்வர் ஆவதற்கும் அவர் முடிவெடுத்திருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த பரபரப்பான அரசியல் சூழலில், பீகார் பாஜகவின் செயற்குழு கூட்டம் நாளை மற்றும் நாளை மறுநாள் என 2 நாட்கள் நடைபெறவுள்ளன.
கூட்டணிக்காக பாஜக சார்பில் இரண்டு நிபந்தனைகளும் வைக்கப்படுவதாக கூறப்படுகிறது.
அதாவது, முதல்வராக நிதிஷ் குமாருக்கு பதவி வழங்கப்படும் நிலையில், பாஜகவின் சார்பில் 2 துணை முதல்வர்கள் பதவி வேண்டும் என்றும் கோரிக்கைகள் வைக்கப்பட்டுள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது.