பாஜக சொந்த புத்தியோடு செயல்படக் கூடியது அல்ல - முத்தரசன்
அநீதிகளுக்கு எதிராக மக்கள் ஒன்று பட்டு போராட வேண்டிய காலம் இது என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார்.
பாஜக சொந்த புத்தியோடு செயல்படாது
சென்னை சைதாப்பேட்டையில் மனித நேய மக்கள் கட்சி சார்பில் உபா சட்டத்தையும், NIA அமைப்பையும் பயன்படுத்தி ஜனநாயகத்தின் குரல்வளையை நெறிக்கும் ஒன்றிய பாஜக அரசையும், தமிழகத்தில் இணை ஆட்சி செய்ய முயலும் ஆளுநரை கண்டித்தும் மாபெரும் மக்கள் திரள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அதில் பங்கேற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன், இலங்கையில் விலைவாசி உயர்வுக்கு எதிராக மக்கள் திரண்டு போராட்டம் நடத்தியதை போன்று, இந்தியாவில் நடக்கும் அநீதிகளுக்கு எதிராக திரண்டு பிரதமர் அலுவலகத்தை முற்றுகையிட்டு பிரதமரே வெளியேறு.. என்று விரட்டியடிக்க கூடிய வகையில் ஒன்றுபட்டு போராட வேண்டிய காலம் இது.
மேலும் பேசிய அவர், மக்கள் ஒன்று பட்டு விடக் கூடாது என்பதற்காக மக்களை மத ரீதியாக, ஜாதி ரீதியாக, மொழி ரீதியாக பிரிக்க கூடிய சூழ்ச்சியை மேற்கொண்டு இருக்கிறார்கள்.
ஆர்.எஸ்.எஸ் தொடங்கிய நாள் முதல் அது மேற்கொண்டுள்ள பணி மக்களை மத ரீதியாக பிளவுபடுத்தக் கூடிய பணி, மாற்று கருத்து சொல்வோரை கொல்லக் கூடிய பணியை தான் செய்கிறார்கள். பாஜக என்ற அரசியல் பிரிவு சொந்த புத்தியோடு செயல்படக் கூடிய அமைப்பு அல்ல. மாறாக ஆர்.எஸ்.எஸ்-ன் கரமாக செயல்படக் கூடிய அமைப்பு, ஆர்.எஸ்.எஸ்-ன் உத்தரவை நிறைவேற்றுகிற அமைப்பு என்று பேசினார்.
மேலும் நாம் இந்து, முஸ்லீம், கிறிஸ்தவர்கள் அல்ல .இந்தியர்கள் வரும் 11ம் தேதி நடைபெறுகிற மனித சங்கிலி போராட்டத்தில் பங்கேற்க அழைப்பு விடுத்தார்.