புதுச்சேரியில் பூஜ்ஜியத்திலிருந்து துணை முதல்வர் வரை: பாஜக வளர்ந்தது எப்படி?
புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் 2016-ம் சட்டமன்றத் தேர்தலில் தனித்து போட்டியிட்ட பாரதிய ஜனதா கட்சி 2% வாக்குகளைப் பெற்று 20 இடங்களில் ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை.
ஐந்து வருடங்கள் கழித்து தற்போது ஆறு இடங்களில் வென்று துணை முதல்வர் பதவியைப் பெறுகிறது. பூஜ்ஜியத்தில் தொடங்கி ராஜ்ஜியத்தை வென்ற கதையாக பாஜக புதுச்சேரியில் அதிகாரத்தை கைப்பற்றியது எப்படி?
கடந்த சட்டமன்றத் தேர்தலில் பாஜக படுதோல்வியைச் சந்திக்க காங்கிரஸ் - திமுக கூட்டணி வென்று ஆட்சி அமைத்தது. கிரண்பேடி துணைநிலை ஆளுநராக நியமிக்கப்பட்டார். நமச்சிவாயம் முதல்வராக நியமிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் டெல்லி அரசியலில் இருந்த நாராயணசாமி புதுச்சேரிக்கு வரவழைக்கப்பட்டு முதல்வர் ஆக்கப்பட்டார்.
நாராயணசாமி ஆட்சியில் இருந்த ஐந்து ஆண்டு காலமும் கிரண் பேடிக்கும் புதுச்சேரி அரசுக்கும் மோதல் போக்கே நிலவி வந்தன. புதுச்சேரி அரசை செயல்படவிடாமல் தொடர்ந்து முட்டுக்கட்டை போட்டு வந்தார் கிரண் பேடி. மூன்று நியமன உறுப்பினர் பதவிக்கு நாராயணசாமி அரசை கலந்தாலோசிக்காமலே பாஜக உறுப்பினர்களை நியமித்தார் கிரண்பேடி.
பூஜ்ஜியம் பெற்ற சட்டமன்றத்தில் பாஜக பின்வாசல் வழியாக மூன்று எம்.எல்.ஏக்களை பெற்றதாக எதிர்க்கட்சிகள் விமர்சித்து வந்தன. பாஜக தான் செல்வாக்கு பெற இயலாத மாநிலங்களில் அதிகாரத்தை அடைய கையாளும் உத்தி ஆளும்கட்சியில் அதிருப்தியில் இருப்பவர்களை தன் கட்சியில் இணைத்துக் கொள்வது.

வட மாநிலங்களில் பல காலமாக கையாண்டு வெற்றி கண்ட உத்தியை புதுச்சேரியில் கையாண்டது. காங்கிரஸ் கட்சியில் அதிருப்தியில் இருந்த நமச்சிவாயம் உள்ளிட்ட எம்.எல்.ஏக்களை ராஜினாமா செய்யவைத்து தன் கட்சியில் இணைத்துக் கொண்டது.
இதனால் பெரும்பான்மை இழந்து தேர்தலுக்கு ஒரு மாதத்திற்கு முன்பாக நாராயணசாமி ராஜினாமா செய்ய நேர்ந்தது. மறுபக்கம் அதிமுகவை கட்டுப்படுத்தி அந்த இடத்தை தன்வயப்படுத்திக் கொண்டது பாஜக.
புதுச்சேரியில் திமுக, அதிமுக காங்கிரஸ், என்.ஆர்.காங்கிரஸ் கட்சிகளே பிரதானமானவை.கடந்த காலங்களில் இவையே மாறி மாறி கூட்டணி வைத்து ஆட்சி செய்து வந்தன.
இந்தத் தேர்தலுக்கு பாஜக - அதிமுக - என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணி வைத்தன. கூட்டணியில் பெரிய கட்சியான என்.ஆர்.காங்கிரஸ் 16 இடங்களில் போட்டியிட்டது. மீதி 14 இடங்களைப் பெற்று பாஜக தான் அதிமுகவுக்கு பகிர்ந்தளித்தது. 9 இடங்களை பாஜக வைத்துக் கொண்டது 5 இடங்களை மட்டும் அதிமுகவுக்கு ஒதுக்கியது.

கடந்த 2016 புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலில் தனித்துப் போட்டியிட்டே மூன்றாம் இடம் பிடித்து 4 எம்.எல்.ஏக்களைப் பெற்ற கட்சி அதிமுக. இந்தத் தேர்தலில் கூட்டணியில் மூன்றாவது கட்சியாக சுருக்கப்பட்டது வெறும் 5 இடங்களில் மட்டுமே போட்டியிட்டது.
என்.ஆர்.காங்கிரஸ் 10 இடங்களிலும் பாஜக 6 இடங்களிலும் வென்று ஆட்சிக்கு தேவையான பெரும்பான்மையைப் பெற்றது. ஆனால் அதிமுக போட்டியிட்ட 5 தொகுதிகளிலும் தோல்வியைச் சந்தித்தது. அதிமுகவுக்கு சாதகமான இடங்களைக் கூட பாஜக எடுத்துக் கொண்டதாக தேர்தல் சமயத்தில் விமர்சனங்கள் எழுந்தன.
அதிமுகவை பிரதான இடத்திலிருந்து அகற்றி இரண்டாவது இடத்தை பாஜக பிடித்துக் கொண்டது. தற்போது ரங்கசாமி மட்டுமே முதலமைச்சராகப் பதவியேற்றுக் கொண்டார். அமைச்சரவை இன்னும் சில தினங்களில் பதவியேற்க உள்ளது.
இந்த நிலையில் பாஜக நமச்சிவாயத்திற்கு துணை முதல்வர் பதவியையும், அமைச்சரவையில் மூன்று இடங்களையும் பெறுவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. பாஜகவில் வென்றவர்கள் பெரும்பாலும் எதிர்க்கட்சிகளிலிருந்து விலகி இணைந்தவர்களே. புதுச்சேரியில் அதிமுக என்கிற கட்சி கிட்டத்தட்ட அஸ்தமனம் ஆகிவிட்ட நிலையில், இரட்டை இலை உதிர்ந்த இடத்தில் தான் தாமரை மலர்ந்திருக்கிறது.