‘’எங்கள் போராட்டத்தாலே கோயில்கள் திறக்கப்பட்டுள்ளன '' - அண்ணாமலை அறிக்கை
கொரோனா ஊரடங்கில் கூடுதல் தளர்வுகளை அறிவிப்பது தொடர்பாக இன்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் கொரோனா ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
கடைகள், உணவகங்கள் 11 மணி வரை செயல்பட அனுமதி அளிக்கப்படுகிறது. மேலும், ஞாயிற்றுக்கிழமைகளில் கடற்கரைகளைத் திறக்கவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, வெள்ளிக்கிழமை, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் கோயில்களில் பக்தர்களுக்கு அனுமதி அளித்தும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில், கோயில்கள் திறப்பு தொடர்பான தமிழ்நாடு அரசின் உத்தரவை ஆத்மார்த்தமாக வரவேற்பதாகத் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்:
"திருக்கோயில்களில் காலையில் வழிபட்டு வியாபாரத்தைத் தொடங்கும் வணிகப் பெருமக்களுக்கும், தினமும் வழிபடும் வழக்கமுடைய மூத்த குடிமக்களுக்கும் தினப்படி வாழ்க்கையில் தமிழர்களின் வாழ்வியலோடு இணைந்த திருக்கோயில்களை எல்லா நாட்களிலும் திறக்க உத்தரவிட்ட தமிழக அரசுக்குக் கட்சியின் சார்பில் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
திருவிழா நாட்களிலெல்லாம் திருக்கோயில்களை மூடி இருக்காமல், மக்களுக்கான எங்கள் போராட்டங்களுக்கு மதிப்பளித்து, கோயில்களை திறக்கும் முடிவெடுத்த தமிழக அரசைப் பாராட்டி வரவேற்கிறோம்.
மக்களின் உண்மையான எண்ணங்களைப் பிரதிபலிக்கும் எங்கள் உணர்வுகளைப் புரிந்துகொண்டு இந்த நவராத்திரி எல்லா நாட்களிலும் திருக்கோயில்களை திறக்க அனுமதி அளித்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆகியோருக்கு பாஜக சார்பில் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்