இலவச வேட்டி சேலை வழங்குவதிலும் ஊழலா? பாஜக சும்மா இருக்காது - அண்ணாமலை எச்சரிக்கை

Tamil nadu Government of Tamil Nadu BJP K. Annamalai
By Karthick Aug 01, 2024 09:58 AM GMT
Report

அண்ணாமலை எச்சரிக்கை

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, தமிழக அரசுக்கு பொங்கல் வேட்டி, சேலை வழங்குவது குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்,

தமிழக மக்களுக்குப் பொங்கல் தொகுப்பில், இலவச வேட்டி சேலை வழங்கும் திட்டம், மறைந்த முன்னாள் முதலமைச்சர் அமரர் எம்.ஜி.ஆர். அவர்கள் ஆட்சியின்போது கொண்டு வரப்பட்டது. விசைத்தறி தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தக் கொண்டு வரப்பட்ட இந்த திட்டத்தின் மூலம், திருச்செங்கோடு, ஈரோடு, திருப்பூர் மற்றும் கோவை சரக விசைத்தறி கூட்டுறவுச் சங்க நெசவாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் பல லட்சம் பேர் ஆண்டு தோறும் பயனடைந்து வருகின்றனர்.

K Annamalai TN BJP

ஒவ்வொரு ஆண்டும், ஜூன் மாதம் முதல் வாரத்தில், தமிழக அரசின் சார்பில் நூல் கொள்முதல் பணிகள் தொடங்கப்பட்டு, விசைத்தறியாளர்களுக்கான வேலைவாய்ப்பு வழங்கப்படுவது வழக்கம். பொங்கல் பண்டிகைக்கு முன்பாகவே, இந்த வேட்டி சேலைகள் பொதுமக்களுக்கும் வழங்கப்படும். ஆனால், திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்து, இலவச வேட்டி சேலை திட்டத்தில் ஊழல் மற்றும் உற்பத்தியாளர்களிடம் கமிஷன் என முறைகேடுகள் பெருக ஆரம்பித்ததோடு, நூல் கொள்முதலில் காரணமில்லாத காலதாமதமும் ஏற்படத் தொடங்கியது. கடந்த மூன்று ஆண்டுகளாக, ஜூன் மாதத்தில் நடைபெற வேண்டிய கொள்முதல் பணிகள், அக்டோபர் மாதம் வரை தள்ளிப் போனதும், இதனால், பொதுமக்களுக்கு, பொங்கல் பண்டிகைக்கு வழங்கப்பட வேண்டிய வேட்டி, சேலை, பிப்ரவரி மாதம் வரை தள்ளிப் போனதையும் நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம். 

உதயநிதியின் கனவை நினைவாக்க...மக்களை கட்டாயப்படுத்துக்கூடாது!! அண்ணாமலை கண்டனம்

உதயநிதியின் கனவை நினைவாக்க...மக்களை கட்டாயப்படுத்துக்கூடாது!! அண்ணாமலை கண்டனம்

 

குறிப்பாக, இந்த திட்டத்தில், கைத்தறித் துறை அமைச்சர் திரு. காந்தி செய்த ஊழல் குறித்து, லஞ்ச ஒழிப்புத் துறையில், தமிழக பாஜக சார்பில் புகாரும் அளிக்கப்பட்டுள்ளது. அதுபோக, இலவச வேட்டி சேலை உற்பத்தி செய்யும் விசைத்தறியாளர்களிடம், 10% கமிஷன் வாங்குவதும் திமுக ஆட்சியில் நடந்து கொண்டிருக்கிறது. விசைத்தறியாளர்களுக்கு நூல் வழங்குவதில் காலதாமதத்தை ஏற்படுத்தி, அதன் பின்னர், பொதுமக்களுக்கு வழங்குவதற்காக தனியாரிடம் வேட்டி, சேலை அதிக விலைக்குக் கொள்முதல் செய்து அதிலும் கமிஷன் பெறுவதற்காக மட்டுமே, திமுக தொடர்ந்து இந்தப் போக்கை மேற்கொள்கிறது. கடந்த மூன்று ஆண்டுகளைத் தொடர்ந்து, இந்த ஆண்டும் திமுக நூல் கொள்முதல் பணிகளை இன்னும் தொடங்கவில்லை. இதனால், விசைத்தறியாளர்கள் வேலைவாய்ப்பின்றி தவிக்கிறார்கள்.

பாஜக சும்மா இருக்காது..

கடந்த ஆண்டே, இலவச வேட்டி சேலை நூல் கொள்முதல் ஒப்பந்தத்துக்கான அரசாணை, வெகு தாமதமாக, ஜூலை 13, 2023 அன்றுதான் வெளியிடப்பட்டது. இந்த ஆண்டோ, நூல் கொள்முதல் ஒப்பந்தத்துக்கான அரசாணை, இதுவரை வெளியிடப்படவில்லை. திமுக ஆட்சிக்கு வந்த பிறகுதான், ஒவ்வொரு ஆண்டும் இது போன்ற காலதாமதம் ஏற்படுத்தப்படுகிறது. விசைத்தறியாளர்கள் நலனுக்காகக் கொண்டு வரப்பட்ட இலவச வேட்டி, சேலை வழங்கும் திட்டம், தற்போது திமுக ஆட்சியில், திமுகவினர் ஊழல் செய்வதற்காகவும், கமிஷன் வாங்குவதற்காகவும் மட்டுமே பயன்படுத்தப்படுவது மிகுந்த கண்டனத்துக்குரியது.  

K Annamalai TN BJP

உடனடியாக, இலவச வேட்டி சேலைக்கான நூல் கொள்முதல் ஒப்பந்தப் பணிகளைத் தொடங்கி, ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள விசைத்தறியாளர்களின் வாழ்வாதாரத்தை உறுதி செய்ய வேண்டும் என்று வலியுறுத்துவதோடு, கடந்த ஆண்டைப் போல, இந்த ஆண்டும் ஊழல் செய்வதற்காகவும், கமிஷன் வாங்குவதற்காகவும், விசைத்தறியாளர்கள் நலனை அடகு வைக்கும் எண்ணம் திமுக அரசுக்கு இருந்தால், தமிழக பாஜக பார்த்துக் கொண்டு சும்மா இருக்காது என்றும் எச்சரித்துக் கொள்கிறேன். 

இவ்வாறு அவர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.