வெள்ள பாதிப்பில் கவனம் செலுத்தாமல் மத்திய அரசை வம்புக்கிழுக்கிறார் உதயநிதி - அண்ணாமலை!
மத்திய அரசுடன் மோதல் போக்கை கடைபிடிப்பதிலேயே தி.மு.க அரசு முனைப்புடன் செயல்பட்டு வருவதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார்.
அண்ணாமலை
தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் "மழை வெள்ள பாதிப்பு நிவாரண பணிகளில் தி.மு.க அரசு துரிதமாக நடவடிக்கை எடுக்கவில்லை.
மொத்தத்தில் தி.மு.க அரசு வெள்ள பாதிப்பை சரியாக கையாளவில்லை என்றே கூற வேண்டும். தென் மாவட்டங்களில் மழை வெள்ளத்தால் கடுமையான பாதிக்கப்பட்டு மக்கள் தவித்து கொண்டிருந்த போது, முதலமைச்சர் டெல்லியில் இந்தியா கூட்டணி கூட்டத்தில் இருந்தார். மத்தியக்குழு கடந்த 20-ம் தேதி தூத்துக்குடி மாவட்டத்தில் மழை வெள்ள பாதிப்புகளை படகில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
மோதல் போக்கு
மேலும் பாதிக்கப்பட்ட மக்களையும் நேரில் சந்தித்து அவர்களின் குறைகளையும் கேட்டறிந்தனர். மத்திய அரசு ஆய்வு மேற்கொண்ட பின்னர் கடந்த 21-ம் தேதி தான் முதலமைச்சர் வெள்ள பாதிப்பை பார்வையிட தூத்துக்குடி செல்கிறார்.
தமிழக முதலமைச்சர் மற்றும் உதயநிதி ஆகியோருக்கு தமிழக மக்கள் மீது அக்கறை இல்லை. மக்கள் மீது அக்கறை இருந்திருந்தால் மழை வெள்ள பாதிப்பு பணியில் அவர்கள் தங்கள் கவனத்தை செலுத்த வேண்டும்.
அதனை விடுத்து, உதயநிதி, மத்திய அரசுடன் வம்புக்கு இழுத்து வருகிறார். மக்களை காப்பதை விட மத்திய அரசுடன் மோதல் போக்கை கடைபிடிப்பதிலேயே தி.மு.க அரசு முனைப்புடன் செயல்பட்டு வருகிறது" என்று கூறியுள்ளார்.