திமுக பைல்ஸ்-3 வெளியிடப்படும்; அந்த கட்சிகளின் ஊழல்களும் உண்டு - அண்ணாமலை
கடந்த 15 நாட்களாக விசிக திருமாவளவனின் கட்டுப்பாட்டில் இல்லை என அண்ணாமலை பேசியுள்ளார்.
அண்ணாமலை
தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, திருச்சி விமான நிலையத்தில் இன்று(10.12.2024) செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார்.
அப்போது பேசிய அவர், "டங்ஸ்டன் சுரங்க விவகாரம் தொடர்பாக நானும் அமைச்சர் எல்.முருகனும், டிசம்பர் 12 ஆம் தேதி மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டியை சந்தித்து பேச உள்ளோம். அந்த சந்திப்பிற்கு பின் நல்ல முடிவுக்கு வருவோம்.
முதல்வர் ராஜினாமா
டங்ஸ்டன் விவகாரத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டமன்றத்தில் நாடகம் ஆடியுள்ளார். முதலமைச்சர் பதவி விலக வேண்டும் என்றால் டாஸ்மாக் பிரச்சனைக்காக பதவி விலக வேண்டும். தமிழகம் முழுவதும் காவல்துறையினர் மீதான தாக்குதல் தொடர்கிறது. இது மிகவும் கண்டிக்கத்தக்கது, தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளதையே இது எடுத்துக் காட்டுகிறது.
மத்திய அரசின் விஸ்வகர்மா திட்டத்தை எதிர்க்கும் தமிழக அரசு கைவினை கலைஞர்கள் என்று பெயர் மாற்றி அமல்படுத்துகிறது. இறுதியில் அந்த திட்டத்திற்கு நிதி கேட்டு மத்திய அரசிடம்தான் வருவார்கள். நிதி கிடைக்கவில்லை என்றால், வடக்கு வாழ்கிறது தெற்குத் தேய்கிறது என்று வசனம் பேசுவார்கள்.
ஆதிதிராவிட நலத்துறை சார்பில் நடத்தப்படும் தொழிற்பயிற்சியில் முடி திருத்துதல், இஸ்திரி போடுதல் உள்ளிட்ட தொழில்கள் கற்றுத் தரப்படுகின்றன. இது குலக்கல்வி இல்லையா?
திமுக பைல்ஸ்-3
கடந்த 15 நாட்களாக கட்சி திருமாவளவனின் கண்ட்ரோலில் இல்லை. புத்தக வெளியீட்டு விழாவுக்கு நான்தான் ஆதவ் அர்ஜுனாவை அனுப்பினேன் என திருமாவளவன் தெரிவித்திருந்தார். அவர் அனுப்பிய ஆதவ் அர்ஜுனா, முதல்வருக்கு எதிராக கருத்து தெரிவித்துள்ளார்.
ஆதவ் பேசிய கருத்துகள், திருமாவளவனின் கருத்துகள் இல்லை என்றால் கட்சி அவருடைய கட்டுப்பாட்டில் இல்லை என்று தானே அர்த்தம். மேலும், இந்த விவாதத்தின் போது பாஜகவை விசிக உடன் ஒப்பீடு செய்கிறார். விசிகவுடன் ஒப்பீடு செய்யும் அளவுக்கு பாஜக கீழே போகவில்லை. உலகில் உள்ள மிகப்பெரிய கட்சிகளில் ஒன்று.
திமுக பைல்ஸ் 1 மற்றும் 2 வெளியிட்டு உள்ளோம். 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நேரத்தில், திமுக பைல்ஸ்-3 வெளியிடப்படும். அதில், திமுக மட்டுமல்லாது, அதன் கூட்டணி கட்சிகள் எடுத்த டெண்டர்கள், அதனால் அவர்கள் அடைந்த லாபங்கள் குறித்து டெண்டர் எடுத்த படங்களுடன் அம்பலப்படுத்தப்படும்" என தெரிவித்துள்ளார்.