‘என்னை ஜெயில்ல போடுங்க ப்ளீஸ்’ - அமைச்சர் செந்தில்பாலாஜியிடம் அண்ணாமலை கோரிக்கை
மின்வாரியம் ஒப்பந்தம் சம்பந்தமாக தனது கருத்துக்கு விளக்கம் கொடுத்த அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பதிலடி கொடுத்துள்ளார்.
சென்னையில் நேற்று செய்தியாளர்களை அண்ணாமலை சந்தித்தபோது, தமிழக மின்சார வாரியம் ரூ.4,442 கோடி மதிப்பிலான மின்திட்ட ஒப்பந்தத்தை அனைத்து விதிகளையும் மீறி நஷ்டத்தில் இயங்கும் திமுகவுக்கு வேண்டிய பி.ஜி.ஆர் நிறுவனத்திற்கு மார்ச் 10 ஆம் தேதி வழங்கியுள்ளது. கோபாலபுரத்துக்கும் பிஜிஆர் நிறுவனத்துக்கும் நேரடி தொடர்பு உள்ளது. இதுதான் திராவிட மாடல். இந்த முறைகேடுகளை முழுமையாக வெளி கொண்டு வர பாஜக போராடும் என தெரிவித்திருந்தார்.
இதற்கு பதிலளித்த மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி திமுக ஆட்சியில் உருவாக்கப்பட்ட எண்ணூர் விரிவாக்க மின் திட்டம் 10 ஆண்டுகள் கிடப்பில் போடப்பட்டு கடந்த 2018 ஆம் ஆண்டு டெண்டர் கோரப்பட்டதில் பி.ஜி.ஆர், பெல் ஆகிய இரு நிறுவனங்கள் பங்கேற்ற நிலையில் பி.ஜி.ஆருக்கு அனுமதி வழங்கப்பட்டது.
ஆனால் வைப்புத்தொகை கட்டாத நிலையில் அதன் ஒப்பந்தம் ரத்தானதால் இதை எதிர்த்து பி.ஜி.ஆர் நிறுவனம் நீதிமன்றம் சென்றதாக கூறினார்.எந்த ஆதாரத்தின் அடிப்படையில் இந்த குற்றச்சாட்டை அண்ணாமலை சொன்னார் என்பதை 24 மணி நேரத்துக்குள் அவர் தெரிவிக்க வேண்டும். இல்லையென்றால் அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்திருந்தார்.
இதனைத் தொடர்ந்து இன்று மாலை செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை எனது மீது நடவடிக்கை எடுக்க உள்ளதாக அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியுள்ளார். தயவு செய்து நடவடிக்கை எடுங்கள். அதற்காக தான் நான் காத்துக் கொண்டிருக்கிறேன். இது தொடர்பாக மானநஷ்ட ஈடு வழக்கு தொடர்ந்தாலும் சரி, உங்களிடம் இருக்கும் காவல்துறை அதிகாரத்தைப் பயன்படுத்தி என்னை சிறையில் அடைத்தாலும் சரி. நீங்கள் மட்டும் ஆட்சியில் இல்லை. நாங்களும் ஆட்சியில் இருப்பதால் இதனை சொல்லக் கடமைப்பட்டுள்ளோம்.
நஷ்டம் ஏற்படும் நிறுவனத்திற்கு முறைகேடு உதவிகளைச் செய்துள்ள நிலையில் இதையெல்லாம் தணிக்கை செய்யும் போது கண்டிப்பாக் பல உண்மைகள் வெளியே வரும். மேலும் திமுக ஆட்சியில் ஆவின் நிறுவனம், போக்குவரத்துத் துறை என முறைகேடுகள் நடைபெற்று வருகிறது என அண்ணாமலை தெரிவித்தார்.