திமுக அரசு தொடர்ந்து இருக்க வேண்டுமா..? ஆளுநரிடம் செல்லும் அண்ணாமலை!
தமிழக முதல்வர் ஏன் கள்ளக்குறிச்சி செல்லவில்லை என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.
அண்ணாமலை
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கோவையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது "தற்போது திமுக கள்ளக்குறிச்சி விவகரத்தை பேச பயப்படுகிறது. அதை பற்றி பேசக்கூடாது என திமுக பயப்படுகிறது.
இன்று மதியம் தமிழக ஆளுநரிடம் தொலைபேசியில் அழைத்து புகார் சொல்லியிருக்கிறேன். பேசக்கூடிய சுதந்திரம் பறிக்கப்பட்டுள்ளது என்பதை சொல்லியிருக்கிறேன். தனிப்பட்ட முறையில் எங்களுடைய கருத்து சுதந்திரம் பாதிக்கப்பட்டுள்ளது.
வரும் திங்கட்கிழமை காலை 11 மணிக்கு ஆளுநர் அனுமதி கொடுத்துள்ளார். இது தொடர்பாக பாஜக குழு ஆளுநரை நேரில் சந்தித்து புகார் அளிக்க இருக்கின்றனர். கள்ளக்குறிச்சி விவகாரத்திற்கும், திமுகவிற்கும் இருக்கும் தொடர்பையும் ஆளுநரிடம் சொல்ல இருக்கின்றோம்.
சிபிஐ விசாரணை
இந்த அரசு தொடர்ந்து இருக்க வேண்டுமா என்பதையும் ஆளுநரிடம் சொல்ல இருக்கின்றோம். இப்போது சிபிஐ விசாரணை வரவேண்டும் என்றால் மாநில அரசிடம் அனுமதி பெற வேண்டும்.
நீதிமன்றம் அல்லது மாநில அரசிடம் அனுமதி பெற்று தான் சிபிஐ விசாரணைக்கு வர முடியும். சிபிஐ விசாரணை நடந்தால் மட்டுமே முழு உண்மை தெரியவரும். இதுபோன்ற பெரிய நிகழ்வு தமிழகத்தில் நடக்கவில்லை.
முதல்வர் ஏன் இதுவரை கள்ளக்குறிச்சி செல்லவில்லை. கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆலோசனை கூட்டத்தினை முதல்வர் கூட்டி நடத்தியிருக்க வேண்டும். முதல்வருக்கு அரசியல் அனுபவம் இருக்கிறது.
முதல்வருக்கு நாங்கள் இதை சொல்லிக் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை. அந்த ஊருக்கு செல்ல முடியாது என முதல்வருக்கு தெரியும். மக்கள் ரோட்டுக்கு வருவார்கள் என்பதும் அவருக்கு தெரியும்” என்று தெரிவித்துள்ளார்.