அவதூறு வழக்கை ரத்து செய்யக்கோரி மனுத்தாக்கல் செய்த அண்ணாமலை - தள்ளுபடி செய்த உயர்நீதிமன்றம்!
அண்ணாமலை தாக்கல் செய்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
புகார் மனு
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கடந்த 2022-ம் ஆண்டு அளித்த பேட்டி ஒன்றில், தீபாவளி பண்டிகை அன்று பட்டாசு வெடிக்கக் கூடாது என்று கிறிஸ்தவ மிஷினரிதான் முதலில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து என்று கூறியிருந்தார்.
அவரின் இந்த பேச்சு இரு மதத்தினரிடையே வெறுப்புணர்வை தூண்டும் வகையில் இருப்பதாக சேலத்தை சேர்ந்த பியுஷ் மனுஷ் என்பவர் அண்ணாமலைக்கு எதிராக சேலம் நீதிமன்றத்தில் புகார் மனு தாக்கல் செய்திருந்தார். இது தொடர்பாக அண்ணாமலை நேரில் ஆஜராக வேண்டும் என்று நீதிமன்றம் சம்மன் அனுப்பியது.
மனு தள்ளுபடி
இந்த சம்மனுக்கு எதிராகவும், தனது மீதான புகாரை ரத்து செய்ய வேண்டும் எனக் கூறியும் அண்ணாமலை சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
அந்த மனுவில் தனது பேச்சு தவறாக எடுத்துக் கொள்ளப்பட்டது என்றும் குறிப்பிட்டிருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், அண்ணாமலை தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்ததோடு, அவர் மீதான வழக்கை ரத்து செய்ய மறுத்துவிட்டது. மேலும், சேலம் நீதிமன்றம் சட்டத்திற்கு உட்பட்டு மனுவை விசாரிக்கலாம் எனவும் உத்தரவிட்டார்.