‘யுவன் நீ கருப்புன்னா..நான் அண்டங்காக்கா கருப்பு’ - அண்ணாமலை காட்டம்
அண்மையில் டெல்லியில் நடைபெற்ற பாரளுமன்ற அலுவல் மொழிக் குழுவின் 37வது கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசுகையில், இந்தி பேசாத மாநிலங்களும் இனி இந்தி பேச வேண்டும.
ஆங்கிலத்துக்கு மாற்றான மொழியாக இந்தியை கொண்டு வரும் நேரம் வந்து விட்டது. இந்தியாவின் அனைத்து மாநிலங்களும் ஆங்கிலத்துக்கு மாற்றாக இந்தியை பேச வேண்டும் என்று கூறியிருந்தார்.
இது நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனையடுத்து, சமூகவலைத்தளங்களில், மாநில மொழிகள் பற்றிய உரிமை குறித்து பல்வேறு நபர்கள், மத்திய அரசுக்கு எதிராக தங்கள் கருத்துகளை பதிவிட்டு வருகிறார்கள்.
இதற்கிடையில், இந்தி திணிப்புக்கு எதிராக இசைப் புயல் ஏ.ஆர். ரகுமானும் உரத்த குரல் கொடுத்தார். தனது ட்விட்டர் பக்கத்தில், தமிழணங்கு என்ற தமிழ்த் தாய் படத்தை பகிர்ந்தார்.
ஏ.ஆர்.ரஹ்மானின் இந்த ட்விட் சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவியது. இதனையடுத்து இந்தி திணிப்புக்கு எதிராக பல தமிழகர்கள் முழக்கம் கொடுத்து வருகின்றனர்.
அதேபோல் நடிகர் சிம்பு, இசையமைப்பாளர் அனிருத் ஆகியோரும் அமித் சாவின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் தமிழால் இணைவோம் என பதிவிட்டு தங்களது கண்டனத்தை வெளிப்படுத்தினர். மேலும் தமிழ் கனெக்ட்ஸ் என்ற ஹேஷ்டேகையும் ட்ரெண்ட் ஆக்கினர்.
இதற்கு மத்தியில் இசைஞானி இளையராஜாவின் அன்னல் அம்பேத்கருடன் பிரதமர் மோடியை ஒப்பிடும் கருத்து அடுத்த அதிர்வலையை ஏற்படுத்தி விவாத பொருளாக மாறியது.
இந்நிலையில், பிரபல இசையமைப்பாளர் யுவன்சங்கர் ராஜா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கருப்பு உடையில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு, “கறுப்பு திராவிடன், பெருமைமிக்க தமிழன்” என்று பதிவிட்டிருந்தார்.
அவரின் இந்த பதிவை பலரும் பகிர்ந்து டிரெண்ட்டாக்கினர்.
இதற்கு பதிலளிக்கும் வகையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, ‘யுவன் கருப்பு என்றால், நான் அண்டங்காக்கா கருப்பு. நான் அவரை விட கருப்பு தமிழன், கருப்பு திராவிடன்’ என கூறியுள்ளார்.