திமுக அரசு எந்த மொழியையும் அதன் கலாச்சாரத்தையும் மதிப்பதில்லை - அண்ணாமலை பேச்சு!
திமுக அரசு எந்த மொழியையும் அதன் கலாச்சாரத்தையும் மதிப்பதில்லை என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
அண்ணாமலை
பாஜக சார்பில் ஊழலை எதிர்த்து 'என் மண் என் மக்கள்' என்ற பாதயாத்திரையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஈடுபட்டுள்ளார். இந்த பயணத்தில் நேற்று அவர் நீலகிரி மாவட்டம் கூடலூர் தொகுதியில் நடைபயணம் மேற்கொண்டார்.
இதுகுறித்து ட்விட்டர் பதிவு ஒன்றை அண்ணாமலை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில் "இன்றைய 'என் மண் என் மக்கள் பயணம்' நீலகிரி மாவட்டம் கூடலூர் சட்டமன்றத் தொகுதியில், பொதுமக்கள் ஆரவாரத்துடன் வெகுசிறப்பாக நடைபெற்றது. தமிழகத்திலேயே அதிக பிரச்சினைகள் இருக்கக்கூடிய சட்டமன்றத் தொகுதி கூடலூர். பாராளுமன்றத் தொகுதி நீலகிரி.
தமிழ், மலையாளம், கன்னடம், உருது என எல்லா மொழிகளும் பேசப்படும் பகுதி. திமுக அரசு எந்த மொழியையும் அதன் கலாச்சாரத்தையும் மதிப்பதில்லை. தமிழின் பெருமையை, தமிழகத்தின் பெருமையை எப்போதும் மறைத்து தங்கள் குடும்ப பெருமையை மட்டுமே பேசுவது திமுகவுக்கு வழக்கம்.
பாஜக அனைத்து முயற்சிகளும் எடுக்கும்
இந்தியாவின் புகழ்பெற்ற தேயிலை நீலகிரி தேயிலை என்றால் அது மிகையாகாது. இந்த நீலகிரி தேயிலையின் புகழ் தற்போது உலகம் முழுவதும் பரவ செய்துள்ளார் நமது மாண்புமிகு பாரத பிரதமர் மோடி அவர்கள்.
சமீபத்தில் நிறைவேறிய G20 மாநாட்டில் பங்குபெற்ற உலகத்தலைவர்களுக்கு ஒரு பரிசு பெட்டகத்தை நமது பாரத பிரதமர் வழங்கினார். அந்த பரிசு பெட்டகத்தில் நீலகிரி தேயிலையும் இடம்பெற்றது என்பது நம் அனைவருக்கும் பெருமையே. நீலகிரி மாவட்டம் இயற்கை தமிழகத்திற்கு வழங்கிய கொடை. அதை பாதுகாப்பது நம் அனைவரின் கடமை. திமுக, இயற்கையைப் பாதுகாக்காது. பெரம்பலூர் தொகுதியில் இருந்து நீலகிரிக்கு ஓடிவந்தவர் இந்த தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் 2G ராஜா. இவர் தொகுதிக்கு வருவதே கிடையாது.
ஊர் ஊராகச் சென்று, இந்து தர்மத்தைப் பழிப்பதுதான் இவரது வேலை. இவரையே திமுகவில் சமூக நீதி கடைபிடிக்காமல் சொந்தத் தொகுதியில் இருந்து நீலகிரி தொகுதிக்கு அனுப்பி வைத்துவிட்டார்கள். எப்போதும் இந்து மதத்தை தரக்குறைவாகப் பேசுவதுதான் இவரது பணி. இப்படி பேசுவதற்காகவா இவருக்கு நீலகிரி மக்கள் வாக்களித்து பாராளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுத்தார்கள்?. நவம்பர் 2022 - இலங்கையிலிருந்து தமிழகத்திற்கு திரும்பி வந்த நம் தமிழ் சொந்தங்களின் வேலைவாய்ப்பைப் பறித்து, TANTEA தொழிற்சாலையை மூட நினைத்த தமிழக அரசுக்கு எதிராக, இதே கூடலூரில் போராட்டம் நடத்தி அந்த திட்டத்தை தமிழக அரசை கைவிடச் செய்தோம்.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள சிறு குறு தேயிலை தோட்ட விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையான, தேயிலை ஒரு கிலோவுக்கு 8 முதல் 13 ரூபாய் மட்டுமே கிடைக்கிறது. தேயிலையில் குறைந்தபட்ச கொள்முதல் விலையை உயர்த்தவேண்டும் மற்றும் தூள் தேயிலை விலையையும் உயர்த்தவேண்டும் என்ற கோரிக்கையை, நமது மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் அவர்களின் கவனத்திற்குக் கொண்டு சென்றுள்ளோம். விரைவில் இதற்கு ஒரு நல்ல தீர்வு காண தமிழக பாஜக அனைத்து முயற்சிகளும் எடுக்கும்' என்று பதிவிட்டுள்ளார்.