சந்திரயான் 3; நிலவுக்கு செல்ல வேண்டும் என்ற முண்டாசு கவிஞன் பாரதியின் கனவு நனவாகியுள்ளது - அண்ணாமலை!
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சந்திரயான் 3 வெற்றி குறித்து பேசியுள்ளார்.
சந்திரயான் 3
நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்ய கடந்த ஜூலை 14ம் தேதி ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து சந்திரயான் 3 விண்கலம் விண்ணில் ஏவப்பட்டது. அதைத் தொடர்ந்து பெங்களூரில் உள்ள இஸ்ரோவின் (ISRO) கட்டுப்பாட்டு மையத்திலிருந்து விண்கலத்தை இயக்கும் பணிகள் நடைபெற்று வந்தது.
இதைத் தொடர்ந்து நேற்று சரியாக 5:44 மணிக்கு விண்கலத்தை தரையிறக்கும் பணிகள் துவங்கப்பட்டு பல சோதனைகளையும், சவால்களையும் எதிர்கொண்டு வெற்றிகரமாக 6:04 மணிக்கு விக்ரம் லேண்டரை நிலவில் தரையிறக்கி சாதனை படைத்தது இஸ்ரோ. நிலவின் தென் துருவத்தில் இதுவரை எந்த ஒரு நாடும் ஆய்வு செய்தது இல்லை என்ற நிலையில், இந்த சரித்திர சாதனையை இந்தியா நிகழ்த்தியிருக்கிறது.
அண்ணாமலை பேட்டி
இந்நிலையில் இன்று கோவை மாவட்டத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை 'நேற்று ஒரு அற்புதமான, மகத்துவமான நாள். நிலாவுக்கு செல்ல வேண்டும் என்று பாட்டெழுதிய முண்டாசு கவிஞன் பாரதியின் கனவு நனவாகியிருக்கிறது.
உலகத்தினுடைய நான்காவது நாடாக நிலவுக்கு சென்றிருந்தாலும், உலகத்தின் முதல் நாடாக இதுவரை யாருமே செல்லாத நிலவின் தென் துருவத்திற்கு நாம் சென்றிருப்பது ஒரு வரலாற்றுச் சாதனை. அதிலும் பெருமை என்னவென்றால் நம்முடைய தமிழகம், விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்தவர் இதனுடைய மிஷன் டேரக்டராக இருந்திருக்கிறார்.
இது இஸ்ரோவுக்கும், இந்தியர்களுக்கும் கிடைத்திருக்கக் கூடிய பெருமை. ஒரு திரைப்படத்தின் பட்ஜெட்டை விட குறைவான செலவில் இந்த சாதனையை நாம் செய்திருக்கிறோம். எனவே இந்தியாவின் வளர்ச்சி மற்றும் இஸ்ரோவினுடைய வளர்ச்சியை நம் கண் முன் பார்த்துக் கொண்டிருக்கிறோம்' என்று அண்ணாமலை பேசியுள்ளார்.