மகாராஷ்டிரா தேர்தல்; ஆட்சியை கைப்பற்றுமா பாஜக? அடுத்த முதல்வர் யார்?
மகாராஷ்டிரா சட்டமன்ற தேர்தலின்வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
பாஜக ஆட்சி
மகாராஷ்டிராவில் பாஜக, ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனா, அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் கூட்டணி ஆட்சி நடந்தது.
சிவசேனாவின் ஏக்நாத் ஷிண்டே முதல்வராக இருந்தார். பாஜகவின் தேவேந்திர பட்னாவிஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் அஜித் பவார் துணை முதல்வராக இருந்தனர்.
சட்டமன்ற தேர்தல்
இந்நிலையில் கடந்த நவம்பர் 20 ஆம் தேதி மகாராஷ்டிராவில் மொத்தமுள்ள 288 சட்டமன்ற தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது.
இந்த தேர்தலில் மகாயுதி என்ற பெயரில் பாஜக, ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனா, அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிட்டன. எதிர்தரப்பில் மகா விகாஸ் அகாடி என்ற பெயரில், காங்கிரஸ், உத்தவ் தாக்கரேவின் சிவசேனா மற்றும் சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகள் கூட்டணியை அமைத்து தேர்தலை சந்தித்தன.
சட்டமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று(23.11.2024) காலை முதல் நடைபெற்று வருகிறது. மொத்தமுள்ள 288 சட்டமன்ற தொகுதிகளில் ஆட்சியை கைப்பற்ற 144 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும்.
பாஜக முன்னிலை
இந்நிலையில் காலை 11;40 நிலவரப்படி பாஜக கூட்டணி 222 தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது. காங்கிரஸ் கூட்டணி 54 தொகுதிகளிலும் பிற கட்சிகள் 12 தொகுதிகளிலும் முன்னிலை பெற்று வருகிறது.
ஆட்சி அமைக்க 144 தொகுதிகளில் வெற்றிபெற வேண்டும் என்ற நிலையில் பாஜக கூட்டணி 222 தொகுதிகளில் முன்னிலை வகித்து ஏறக்குறைய ஆட்சி அமைப்பது உறுதி செய்துள்ளது.
இந்நிலையில் சிவசேனாவின் ஏக்நாத் ஷிண்டே மீண்டும் முதல்வராக தொடர்வாரா அல்லது பாஜகவை சேர்ந்த தேவேந்திர பட்னாவிஸ் முதல்வராக தேர்வு செய்யப்படுவாரா என கேள்வி எழுந்துள்ளது.