பாஜக - அதிமுக கூட்டணியால் எதிர்கட்சிகள் அச்சம் அடைந்துள்ளனர்: நிர்மலா சீதாராமன்

minister political Finance
By Jon Feb 27, 2021 08:16 AM GMT
Report

தமிழக சட்டமன்ற தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் மிகத் தீவிரமாக பிரச்சாரங்களில் ஈடுபட்டு வருகின்றன. தேசியக் கட்சிகளின் தலைவர்களும் தமிழகத்திற்கு தொடர்ந்து வருகை புரிந்து வருகின்றன. அதன் ஒரு பகுதியாக சென்னை தியாகராய நகரில் உள்ள நட்சத்திர விடுதியில், பாஜக சார்பில் வணிகர்கள் மற்றும் தொழிலதிபர்களுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில், கலந்துகொண்டு பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், பாஜக அதிமுக கூட்டணியால் எதிர்கட்சிகளுக்கு அச்சம் எற்பட்டு விட்டதாக தெரிவித்தார். தமிழ்நாட்டில் இருந்து பாஜகவுக்கு ஒரு எம்.பி., கூட இல்லாத போதும், தமிழ்நாட்டுக்கு குறை வைக்காமல் பிரதமர் மோடி செயலாற்றி வருவதாக தெரிவித்தார்.

இலங்கையில் மரண தண்டனை விதிக்கப்பட்ட தமிழக மீனவர்களை பத்திரமாக மீட்டு, குடும்பத்தினருடன் சேர்த்து வைத்தது மோடி அரசு என அவர் குறிப்பிட்டார். சாலைகள், ஜவுளிப் பூங்கா, மின்னனு சந்தைகள், மீனவர் துறைமுகம் என்று பல்வேறு திட்டங்களை தமிழ்நாட்டிற்கு தந்தது பாஜக அரசு என அவர் கூறினார்.

கூடங்குளம், ஜல்லிக்கட்டு என்று தமிழ்நாட்டு முன்னேற்றத்துக்கு இடையூராக இருந்தவர்கள் தான் தற்போது மோடி அரசைக் குறை கூறுவதாக நிர்மலா சீதாராமன் விமர்சனம் செய்தார். வேளாண் சட்டங்களால் விவசாயிகளின் நிலம் பறிபோகும் என்ற பொய் பிரசாரம் செய்யும் அரசியல் செய்யும் சூழல்தான் நாட்டில் உள்ளதாகவும் நிதியமைச்சர் சாடினார்.

இதனைத் தொடர்ந்து, சென்னை தியாகராய நகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில், தேவேந்திர குல வேளாளர் நல சங்கங்களின் கூட்டமைப்பினர் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்தனர். தங்கள் சமூகத்தினரை தேவேந்திரகுல வேளாளர் என அறிவிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்ததற்காக அப்போது அவர்கள் நன்றி தெரிவித்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நிர்மலா சீதாராமன், சங்க இலக்கிய காலத்தில் இருந்து முக்கியத்துவம் உடைய சமுதாயம் தேவேந்திர குல வேளாளர்கள் சமுதாயம் என்றார். எதிர்க்கட்சியினரின் விமர்சனங்களுக்கு பதில் அளித்து பேசிய நிர்மலா சீதாராமன், நல்லது செய்வது போல் வேஷம்போட்டு கலவரத்தை தூண்டும் கட்சியல்ல பாஜக என தெரிவித்தார்.