கால்பந்து இறுதிப் போட்டியில் சாதனைப் படைத்த நடுவர்...!
9 சர்வதேச கால்பந்து போட்டியின் இறுதிப் போட்டியில் நடுவராக பணியாற்றியவர் என்ற சாதனையை கால்பந்து நடுவர் ஜான் குய்பர்ஸ் படைத்துள்ளார்.
சர்வதேச கால்பந்து போட்டியில் கிறிஸ்டியானோ ரொனால்டோ, மெஸி, நெய்மர் போன்ற விளையாட்டு வீரர்கள் தங்களது விளையாட்டு திறமையின் மூலம் ஜாம்பவான்களாக திகழும் நிலையில் களத்தில் இவர்களை கட்டுப்படுத்துவதோடு, சிறப்பான நல்ல தீர்ப்பை வழங்கி ஆட்டத்தை நேர்த்தியோடு கொண்டு செல்லும் பணி களத்தில் நடுவராக பணியாற்றுபவரின் கையில்தான் இருக்கிறது. ஒரு சிறந்த கால்பந்து விளையாட்டு வீரர் 9 முதல் 12 கிலோ மீட்டர் தூரம் வரை ஓடுகிறார் என்றால், ஒரு கால்பந்து நடுவர் 10 முதல் 15 கிலோ மீட்டர் தூரம் வரை ஓடியாக வேண்டும்.
சர்வதேச போட்டிகளில் நடுவராக செயல்பட இந்த தகுதியை நடுவர்கள் நிரூபித்தே ஆகவேண்டும். அந்த வகையில் நடந்து முடிந்த யூரோ கோப்பை கால்பந்து போட்டியின் இறுதி ஆட்டத்தில் நடுவராக செயல்பட்டதன் மூலம் ஒன்பது சர்வதேச கால்பந்து போட்டிகளின் இறுதிப் போட்டியில் நடுவராக செயல்பட்டவர் என்ற பெருமையை பெற்றுள்ள நடுவர் ஜான் குய்பர்ஸ் பெற்றுள்ளார்.
இந்த சாதனை சாதாரணமாக வந்துவிடாது. இதற்கென இவர்களுக்கு பல தேர்வுகளும் உண்டு. கால்பந்து விதிமுறைகள் தொடர்பான தேர்வுகளில் எல்லாம் இவர்கள் தேர்ச்சியடைய வேண்டும். ஒரு சர்வதேச போட்டிக்கு செல்வதற்கு முன்பாக உடல் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே அந்த போட்டியில் அவர் நடுவராக செயல்பட முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.