திருச்சி பிஷப் ஹீப்பர் கல்லுாரி தமிழ்த்துறை தலைவர் மீது மாணவிகள் பாலியல் புகார்!
திருச்சி புத்தூர் பிஷப் ஹீபர் கல்லூரியின் தமிழ்த் துறையில் பட்டமேற்படிப்பு படித்த சில மாணவிகள், தமிழ்த் துறை தலைவர் மீது பாலியல் குற்றச்சாட்டு கூறி, 5 பக்க அளவிலான புகார் மனுவை கல்லூரி முதல்வருக்கு அனுப்பியுள்ளனர்.
அந்த புகார் மனுவில், வகுப்பறையில் மிக நெருக்கமாக அமர்ந்து கொண்டு இரட்டை அர்த்தம் வரும்படி கொச்சையாக பேசுவது போன்ற பல்வேறு பாலியல் சீண்டலில் ஈடுபட்டார். உச்சகட்டமாக, சட்டையையும் பேண்ட்டையும் தளர்த்திக் கொண்டு, அவர் செய்த சேட்டைகளை பார்த்து, தலையை குனிந்து கொண்டே வகுப்பறையில் இருந்தோம் என்று தெரிவித்துள்ளனர்.
மேலும், வகுப்பறையில் குறைந்தளவு மாணவிகள் இருந்தால், தன் அறைக்கு வரச்சொல்லி, கட்டாயப் படுத்துகிறார். அதே துறையில் உதவி பேராசிரியராக பணிபுரியும் பெண் ஒருவர், துறைத்தலைவரை பார்க்க போகும்போது, முகம் கழுவி மேக்கப் போட்டுக் கொண்டு தான் போக வேண்டும் என வலியுறுத்துகிறார்.
இந்த செயல்களுக்கு அதே துறையில் பணியாற்றும் பெண் உதவி பேராசிரியரும் உறுதுணையாக செயல்படுவதாக தெரிவித்துள்ளனர். இதனால் தாங்கள் கல்லூரியில் இருந்து வெளியேற விரும்புவதாக மாணவிகள் தங்களது மனுவில் கூறியிருந்தனர். மேலும் பள்ளி நிர்வாகத்திடம் பலமுறை புகார் அளித்தும் இதுகுறித்து கல்லூரி நிர்வாகம் எந்த ஒரு நடவடிக்கையை எடுக்கவில்லை என்று அவர்கள் புகார் தெரிவித்திருந்தனர். தற்போது மாணவிகளின் புகார் குறித்து போலீஸ் தரப்பிலும் விசாரணையை துவங்கி உள்ளனர்.
இந்த நிலையில், பாலியல் புகாருக்கு உள்ளான தமிழ்த்துறை தலைவர் பால் சந்திரமோகனை அதிரடியாக பணி நீக்கம் செய்து, கல்லூரி நிர்வாகம் உத்தரவிட்டு உள்ளது. மேலும், சம்பந்தப்பட்ட உதவி பேராசிரியையிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
தொடர்ந்து பள்ளி முதல் கல்லுாரி வரை மாணவிகள் மீதான பாலியல் அத்துமீறல்கள் தொடர்பான புகார்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.பாலியல் அத்துமீறல்களில் ஈடுபடும்
நபர்களை தமிழக அரசு இரும்பு கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுகின்றனர்.