சோகத்தில் முடிந்த காதலனின் பிறந்த நாள் சர்ப்ரைஸ் - குளத்தில் மிதந்த 3 உடல்கள்
பள்ளி மாணவி மற்றும் இரு இளைஞர்களின் உடல் குளத்தில் சடலமாக மீட்கப்பட்டுள்ளது.
3 பேர் சடலம்
திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையை அடுத்த குறிச்சிகோட்டையைச் சேர்ந்த 11ஆம் வகுப்பு பள்ளி மாணவியை காணவில்லை என அவரது பெற்றோர் தளி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
இந்நிலையில், உடுமலைப்பேட்டை - மூணாறு செல்லும் சாலையில் மானுப்பட்டி என்ற பகுதியிலுள்ள குளத்தில் மூவரின் சடலம் மிதப்பதாகத் தளி காவல்துறைக்குத் தகவல் கிடைத்தது.
இன்ஸ்டாகிராம் காதல்
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர், தீயணைப்பு துறையினரின் உதவியுடன், மூவரின் சடலங்களை மீட்டனர். மேலும் யாரேனும் சிக்கியிருக்கிறார்களா என தேடிய போது, ஒரு சக்கர வாகனம் கண்டுபிடிக்கப்பட்டது.
விசாரணையில், சடலமாக கிடந்த மூவரில், குறிச்சிகோட்டையைச் சேர்ந்த 11ஆம் வகுப்பு பள்ளி மாணவி ஒருவர், மற்ற இருவரில் ஐடிஐ படிக்கும் குறிச்சிக்கோட்டையைச் சேர்ந்த மாரிமுத்து (20) என்பதும் இன்னொருவர் சென்னை வேளச்சேரியை சேர்ந்த ஆகாஷ்(20) என தெரிய வந்துள்ளது.
பள்ளி மாணவிக்கும் ஆகாஷிற்கும் இன்ஸ்டாகிராம் மூலம் காதல் ஏற்பட்டுள்ளது. பள்ளி மாணவி தனது உறவினரான மாரிமுத்துவுக்கு ஆகாஷை அறிமுகம் செய்து வைத்துள்ளார்.
பிறந்தநாள் சர்ப்ரைஸ்
கடந்த 18 ஆம் தேதி மாணவிக்கு பிறந்தநாள் என்பதால், மாணவிக்கு சர்ப்ரைஸ் அளிக்க 17ஆம் தேதியே ஆகாஷ் தனது இரு சக்கர வாகனம் மூலம் சென்னையிலிருந்து குறிச்சிகோட்டையை வந்தடைந்துள்ளார். இரவு 10 மணியளவில் உனக்கு சர்ப்ரைஸ் கிப்ட் தருகிறேன் என மனைவியை அழைத்துள்ளார். அதன் பின்னர் மூவரும் இரு சக்கர வாகனத்தில் ஒன்றாக பயணித்துள்ளனர்.
இரு சக்கர வாகனம் கட்டுப்பாட்டை இழந்த நிலையில், குளத்தில் விழுந்துள்ளது. இரவு நேரம் என்பதாலும், குட்டை சேறும் சகதியுமாக இருந்ததால் மூவரும் வெளியே வர முடியாமல் மூச்சுத் திணறி உயிரிழந்ததாக கூறப்படுகிறது. சம்பவ நடந்து 3 நாட்கள் ஆகி விட்டதால் உடல்கள் அழுகிய நிலையிலே மீட்கப்பட்டது.