பறவை காய்ச்சல் எதிரொலி : 55 ஆயிரம் வாத்துகளை கொல்ல முடிவு

keralagovernment birdflu killducks
By Petchi Avudaiappan Dec 15, 2021 05:35 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in இந்தியா
Report

பறவை காய்ச்சல் பீதி காரணமாக கேரளாவில்  55 ஆயிரம் வாத்துகளை கொல்ல முடிவு செய்யப்பட்டுள்ள தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

கேரளாவில் கொரோனா பாதிப்பு குறையாத நிலையில் கடந்த ஆண்டு பறவை காய்ச்சல் கண்டறியப்பட்டது. கேரளாவில் கோட்டயம் மாவட்டத்தில் நீண்டூர் பகுதியிலும் ஆலப்புழா மாவட்டம் குட்டநாடு பகுதியில் எடத்துவாபள்ளி தாளவாடி உள்ளிட்ட பகுதிகளில் நூற்றுக்கணக்கான கோழி மற்றும் வாத்து பண்ணைகள் உள்ளன. 

சில பண்ணைகளில் வளர்க்கப்பட்ட வாத்துகளுக்கு கடந்த சில வாரங்களுக்கு முன்பு  நோய் பாதிப்பு ஏற்பட்டது.இதுபற்றி அறிந்த கால்நடை மருத்துவர்கள் அந்த பறவைகளின் மாதிரிகளை கால்நடை ஆய்வகத்திற்கு அனுப்பி வைத்தனர். அந்த ஆய்வின் முடிவுகள் நேற்று வெளிவந்த நிலையில், அந்த பறவைகளுக்கு பறவை காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டிருப்பது தெரிய வந்தது.

இது மனிதர்களையும் பாதிக்கும் என்பதால் உடனடியாக இந்த பறவைகளை அழிக்க ஆலப்புழா மாவட்ட நிர்வாகம் முடிவு செய்தது. மேலும் கோட்டயம் மாவட்ட கலெக்டர் ஜெயஸ்ரீ தலைமையில் அதிகாரிகள் அவசர ஆலோசனை நடத்தப்பட்டது.

இதில்  ஆலப்புழாவில் 20,000 வாத்துகளையும், கோட்டயத்தில் 35,000 வாத்துகளையும் கொல்ல முடிவு செய்யப்பட்டுள்ளது.மேலும் கோட்டயத்தில் பறவை காய்ச்சல் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ள பகுதியில் இருந்து சுமார் 5 கிலோ மீட்டர் சுற்றளவில் பறவை இறைச்சி, முட்டைகள் விற்க மாவட்ட நிர்வாகம் தடை விதித்து உள்ளது. அதேபோல் பண்ணைகளில் உள்ள பறவைகளுக்கு நோய் பாதிப்பு இருப்பது தெரியவந்தால் உடனடியாக மாவட்ட நிர்வாகத்திற்கு தெரிவிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.