பறவை காய்ச்சல் பாதிப்பு - 21,500 பறவைகளை அழிக்கும் பணி தொடக்கம்!
பறவை காய்ச்சல் தொற்று ஏற்பட்டுள்ள பறவைகளை கொல்லும் பணியை சுகாதாரத்துறை ஊழியர்கள் தொடங்கினர்
பறவை காய்ச்சல்
கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டம் எடத்துவா பகுதியில் உள்ள பண்ணையில் வாத்துக்கள் தொடர்ச்சியாக இறந்தன. இதனால் பறவை காய்ச்சல் பாதிப்பு இருக்குமோ என்ற சந்தேகம் எழுந்தது.
இதனையடுத்து இறந்த வாத்துக்களில் இருந்து மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டது. இதில், வாத்துக்களுக்கு 'ஏவியான் இன்புளூ வன்சா' என்ற பறவை காய்ச்சல் தொற்று பரவியிருந்தது உறுதி செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து ஆலப்புழா மாவட்ட ஆட்சியர் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர்.
நடவடிக்கை
இதில், பறவை காய்ச்சல் தொற்று பாதித்திருந்த இடத்திலிருந்து 1 கி.மீ சுற்றளவில் வளர்க்கப்படும் வாத்து உள்ளிட்ட பறவை இனங்களை அழிக்க முடிவு செய்யப்பட்டது. மேலும், தொற்று பாதித்த பகுதிக்கு அருகே 21,537 பறவைகள் வளர்க்கப்பட்டு வருவது தெரியவந்ததை அடுத்து, அவற்றை கொன்று எரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இந்நிலையில் அந்த பறவைகளை கொல்லும் பணியை இன்று சுகாதாரத்துறை ஊழியர்கள் தொடங்கினர். அதற்காக பண்ணைகள், வீடுகளில் வளர்க்கப்பட்ட பறவைகள் தனியாக ஒரு இடத்திற்கு கொண்டு செல்லப்பட்டு சுகாதாரத்துறையினர் அழித்து வருகின்றனர்.