பிபின் ராவத் பயணித்த ஹெலிகாப்டர் மேகமூட்டத்தில் மறையும் வீடியோ காட்சி வெளியானது
குன்னூர் அருகே மலைப்பகுதியில் ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் பலியானார்.
இந்நிலையில் ஹெலிகாப்டர் மேகமூட்டத்தில் மறையும் வீடியோ காட்சி வெளியானது. நீலகிரி மாவட்டம் வெலிங்டனில் உள்ள ராணுவ பயிற்சி கல்லூரியில் நடைபெற இருந்த ராணுவ பயிற்சி அதிகாரிகளுக்கான கூட்டத்தில் பங்கேற்பதற்காக, மனைவி மதுலிகா ராவத்துடன் தமிழகம் வந்தார்.
ராணுவ விமானம் மூலம் கோவை மாவட்டம் சூலூர் விமானப்படை தளத்துக்கு காலை 10.30 மணிக்கு வந்த அவர்கள், சிறிது நேரம் அங்கேயே ஓய்வு எடுத்தனர்.
பின்னர் விமானப்படைக்கு ெசாந்தமான ‘எம்.ஐ.17 வி 5’ ரக ஹெலிகாப்டர் மூலம் பகல் 11.30 மணிக்கு வெலிங்டன் புறப்பட்டனர்.
இந்த ஹெலிகாப்டரில் பிபின் ராவத், மனைவி மதுலிகா ராவத், ராணுவ கமாண்டோக்கள் மற்றும் 4 விமானிகள் என 14 பேர் இருந்தனர்.
ஹெலிகாப்டரை விங் கமாண்டர் பிரித்வி சிங் சவுகான் ஓட்டினார். இந்த ஹெலிகாப்டர் குன்னூர் பஸ் நிலையத்தில் இருந்து 5 கி.மீ. தொலைவில் உள்ள காட்டேரி பூங்கா, நஞ்சப்ப சத்திரம் பகுதியில் பகல் 12.05 மணியளவில் சென்றபோது, திடீரென விமானியின் கட்டுப்பாட்டை இழந்தது.
இதனால் தரையை நோக்கி வந்த ஹெலிகாப்டர் மலைப்பகுதியில் உள்ள பள்ளத்தாக்கில் விழுந்து நொறுங்கியது. மிகவும் அடர்ந்த அந்த வனப்பகுதியில், ஹெலிகாப்டரின் காற்றாடி மரத்தில் மோதி கீழே விழுந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் விபத்திற்கு முன் ஹெலிகாப்டர் மேகமூட்டத்தில் மறையும் காட்சியை அங்கிருக்கும் சுற்றுலா பயணிகள் படம் பிடித்துள்ளனர்.
அந்த காட்சியில் சுற்றுலா பயணிகள் ஹெலிகாப்டர் கீழே விழுந்ததா என பேசுவதும் காட்சியில் இடம் பெற்றுள்ளது.
இந்தகாட்சி உண்மையானதா என்று விமானப்படை இது வரை உறுதி செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது