இன்றே நாடாளுமன்ற முதல் நாள் ! இனி ஒரு போதும் பாஜகவிற்கு ஆதரவு இல்லை...விலகிய பிஜு ஜனதா தள்!!
ஒடிசா மாநிலத்தில் 24 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த பிஜு ஜனதா பாஜகவிடம் தனது ஆட்சியை பறிகொடுத்துள்ளது.
பிஜு ஜனதா தள் - பாஜக
1998 ஆம் ஆண்டு முதல் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்த பிஜு ஜனதா தள், ஒடிசா மாநிலத்தில் அசைக்க முடியாத சக்தியாக உருப்பெற்றது. கடந்த 2000-ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று மாநிலத்தின் முதல்வராக பதவியேற்ற நவீன் பட்நாயக் தொடர்ந்து 24 ஆண்டுகள் ஆட்சியில் முதல்வராக நீடித்தார்.
அதே நேரத்தில் அக்கட்சி தொடர்ந்து தனது ஆதரவை பாஜகவிற்கு அளித்து வந்தது. பாஜகவின் மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ராஜ்ய சபா எம்.பி'யாக ஒடிசாவில் இருந்து தேர்வாக பெருமளவு உதவியது பிஜு ஜனதா தள்.
தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து 2009-ஆம் ஆண்டு வெளியேறிய நிலையிலும், பாஜகவின் ஆதரவு நிலைப்பாட்டிலேயே அக்கட்சி நீடித்து வந்தது. தற்போது அக்கட்சி 9 ராஜ்ய சபா எம்.பி'க்கள் உள்ளார்கள்.
ஆனால், ஒரு மக்களவை உறுப்பினர் கூட இல்லை. 1997-ஆம் ஆண்டு கட்சி துவங்கப்பட்டதில் இருந்து பிஜு ஜனதா தள் சந்தித்திராத மோசமான தோல்வியை தற்போது நடைபெற்று முடிந்த சட்டமன்ற - நாடாளுமன்ற தேர்தலில் பெற்றுள்ளது. 147 சட்டமன்ற தொகுதிகளில் 57'இல் மட்டுமே அக்கட்சி கைப்பற்றியிருக்கிறது.
மக்களவை மொத்தமாக காலி. இந்த நிலையில் தான் அதிரடியான முன்னெடுப்பை அக்கட்சி கொண்டுவந்துள்ளது. கட்சியின் தலைவர் நவீன் பட்நாயக் தலைமையில் ராஜ்ய சபா எம்.பி'க்கள் கூட்டம் நடைபெற்றது.
ஆதரவு இல்லை...
அதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ராஜ்யசபாவில் அக்கட்சியின் தலைவர் சஸ்மித் பத்ரா, இந்த முறை பிஜேடி எம்பிக்கள் பிரச்சினைகளை மட்டும் பேசுவதோடு நின்றுவிடாமல், ஒடிசாவின் நலனை மத்திய பாஜக அரசு புறக்கணித்தால் போராட்டம் நடத்துவது உறுதி என்றார்.
ஒடிசாவுக்கு சிறப்பு அந்தஸ்து கோரிக்கையை எழுப்புவதோடு, பிஜேடி எம்.பி.க்கள் மோசமான மொபைல் இணைப்பு மற்றும் மாநிலத்தில் உள்ள வங்கிக் கிளைகளின் குறைந்த அடர்த்தி ஆகிய பிரச்சினைகளை எழுப்புவார்கள் என்றார். நிலக்கரி ராயல்டியை திருத்த வேண்டும் என்ற ஒடிசாவின் கோரிக்கை, கடந்த 10 ஆண்டுகளாக மத்திய அரசால் புறக்கணிக்கப்பட்டு வருகிறது.
இது அவர்களின் உரிமையான பங்கை இழந்த மாநில மக்களுக்கு பெரும் இழப்பை ஏற்படுத்துகிறது என்று அவர் மேலும் கூறினார்.
பிஜேபி தலைமையிலான அரசாங்கத்திற்கு ஆதரவை வழங்குவது என்ற தனது முந்தைய நிலைப்பாட்டை பிஜேடி தொடருமா என்ற கேள்விக்கு, "இனி பாஜகவுக்கு ஆதரவு இல்லை, எதிர்க்கட்சி மட்டுமே. ஒடிசாவின் நலன்களைப் பாதுகாக்க நாங்கள் எந்த எல்லைக்கும் செல்லலாம் என்றார்.