YouTube பார்த்து சிகிச்சை அளித்த மருத்துவர்..துடிதுடித்து உயிரிழந்த இளைஞர் - பகீர் பின்னணி!
யூடியூப் வீடியோ பார்த்து மருத்துவர் சிகிச்சை அளித்ததால் நோயாளி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
யூடியூப் வீடியோ
பீகார் மாநிலம் பாட்னாவில் உள்ள ஒரு குறிப்பிட்ட பகுதியில் தனியார் மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இங்கு போஜ்பூரைச் சேர்ந்த இளைஞர் தீபக் பாஸ்வான் உடல்நலக் குறைவு ஏற்பட்டு வாந்தி எடுத்தபடி, மருத்துவமனைக்கு வந்துள்ளார்.
அப்போது மருத்துவமனையிலிருந்த மருத்துவர்கள் யூடியூப் வீடியோக்களைப் பார்த்து இளைஞருக்குச் சிகிச்சை அளித்ததாகக் கூறப்படுகிறது. இதனால் அந்த இளைஞரின் உடல்நிலை மோசமாக்கியது. அதன்பிறகு சரியான சிகிச்சை இல்லாததால் அந்த இளைஞர் உயிரிழந்தார்.
இதனால் ஆத்திரமடைந்த குடும்பத்தினர் மருத்துவமனை முன் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது மருத்துவர்கள் மற்றும் ஊழியர்கள் அங்கிருந்து தப்பியோடினர். இது குறித்துக் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
மருத்துவர் சிகிச்சை
இதற்கிடையில், இறந்தவரின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். முதற்கட்ட விசாரணையில் அந்த இளைஞன் சிஐஎஸ்எஃப்-க்கு தேர்வாகி இருந்தது தெரியவந்தது.
மேலும் மருத்துவமனை நிர்வாகத்திடம் விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும்,மரணத்திற்கான காரணம் மற்றும் மருத்துவர்களின் அலட்சியமா என்பது பிரேதப் பரிசோதனை அறிக்கைக்கு பிறகே தெரியவரும் என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.