மகனை விடுவிக்கக் கோரி சென்ற பெண்ணை காவல் நிலையத்தில் வைத்து மசாஜ் செய்ய வைத்த அதிகாரி
மகனை விடுவிக்கக்கோரி காவல் நிலையம் சென்ற பெண்ணை மசாஜ் செய்ய வைத்த காவல் துறை உயர் அதிகாரியால் சர்ச்சை எழுந்துள்ளது.
பீகார் மாநிலம், சஹர்சா மாவட்ட காவல் நிலையத்தில் அடைக்கப்பட்டுள்ள தன் மகனை விடுவிக்கக்கோரி பெண் ஒருவர் சென்றுள்ளார்.
ஆனால் அந்த பெண்ணை நௌஹட்டா காவல் நிலைய உயர் அதிகாரியான சஷிபூஷன் சின்ஹா என்பவர் மகனை விடுவிக்க வேண்டுமானால் மசாஜ் செய்யும்படி கேட்கவே அந்த பெண்ணும் அந்த அதிகாரிக்கு மசாஜ் செய்து விடுகிறார்.
தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. அந்த வீடியோவில் சஷிபூஷன் சின்ஹா மேலாடை இல்லாமல் இருப்பது மேலும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
தொடர்ந்து, அந்த வீடியோ காட்சியில் அந்த பெண் அவருக்கு மசாஜ் செய்து கொண்டிருக்கும்போதே செல்போனில் வழக்கறிஞரிடம் பேசும் அதிகாரி பெண்ணின் மகனை விடுவிக்க முயற்சி எடுக்குமாறு கூறுகிறார்.
மகனின் தாய் ஏழ்மையானவர் என்பதால் பணம் செலுத்த இயலாது என தெரிவிக்கும் அந்த அதிகாரி விரைந்து செயல்படுமாறும் கேட்டுக்கொண்டார்.
காவல் நிலையத்துக்கு வந்த பெண்ணை அதிகாரி ஒருவர் மசாஜ் செய்ய வைத்த சம்பவம் பெரும் சர்ச்சையாக வெடித்ததை தொடர்ந்து அந்த அதிகாரியிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.