குடும்பத்தையே கதற கதற கொன்று சடலத்தை வீட்டிலேயே தொங்கவிட்ட மாவோயிஸ்டுகள் - அதிர்ச்சி சம்பவம்
பீகாரில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேரை மாவோயிஸ்டுகள் கதற கதற கொலை செய்து, அவர்களின் சடலத்தை அதே வீட்டு முற்றத்திலேயே தூக்கில் தொங்கவிட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த சனிக்கிழமை இரவு அன்று , பீகார் மாநிலம் கயாவை சேர்ந்த சர்ஜு போக்தா என்பவரின் வீட்டிற்குள் புகுந்த மாவோயிஸ்டுகள், அவருடைய இரு மகன்களையும், அவா்களின் மனைவிகளையும் கொலை செய்து, வீட்டு முற்றத்தில் அமைந்துள்ள கால்நடை கொட்டகையில் தூக்கில் தொங்க விட்டுள்ளனா்.
அதன் பிறகு, வீட்டில் வெடிகுண்டை வைத்து வெடிக்கச் செய்தனா். அதன் காரணமாக வீட்டின் சில பகுதிகள் தீயில் கருகியுள்ளன. இந்த தாக்குதலின்போது சர்ஜு போக்தா அவருடைய வீட்டில் இல்லை.
கடந்த ஆண்டு கயா மாவட்டத்தில் உள்ள மனோபார் கிராமத்தில் 4 மாவோயிஸ்டுகளை போலீசார் என்கவுண்ட்டரில் சுட்டுக் கொன்றனர். அது போலி என்கவுண்ட்டர் என்று குற்றஞ்சாட்டிய மாவோயிஸ்டுகள், தங்களின் சகாக்கள் 4 பேர் தங்கியிருந்த வீட்டினர்தான் அவர்களுக்கு விஷம் வைத்து கொன்று விட்டனர்.
பின்னர் அவர்கள் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். அதன்பின் போலி என்கவுண்ட்டர் நாடகம் அரங்கேற்றப்பட்டதாக குற்றம் சாட்டியிருந்தனர்.
இச்சம்பவத்திற்கு பழிவாங்கவே இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக மாவோயிஸ்டுகள் சர்ஜு போக்தாவின் வீட்டில் குறிப்பு ஒன்றையும் எழுதி வைத்து விட்டுச் சென்றுள்ளனா். இச்சம்பவத்தைத் தொடர்ந்து கொலை செய்த மாவோயிஸ்டுகளைத் தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.